ஜி.எஸ்.டி. வரி உயர்வை கண்டித்து சாலை மறியல் போராட்டம்
அத்தியாவசிய பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி உயர்வை கண்டித்து அரிசி ஆலை உரிமையாளர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
கோலார் தங்கவயல்;
மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜி.எஸ்.டி வரியை மாற்றி அமைத்தது. அதன்படி அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை மற்றும் உணவு பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரிகள் உயர்த்தப்பட்டுள்ளது.இந்த வரி உயர்வை கண்டித்து பலபகுதிகளில் வியாபாரிகள் உள்பட பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோலார் மாவட்டம் பங்காருபேட்டையில் 20-க்கும் மேற்பட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இவர்களுக்கு ஆதரவாக பங்காருபேட்டை வர்த்தக சங்கத்தினரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது அதில் கலந்து கொண்ட வர்த்தக சங்கத்தலைவர் கிரீஷ் பேசியதாவது:-
மத்திய அரசு ஏற்கனவே, ஜி.எஸ்.டி. வரி என்ற பெயரில் மக்கள் பணத்தை சுரண்டி வருகிறது. தற்போது ஏழை மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை மற்றும் உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை உயர்த்தி உள்ளது.
இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்படுகின்றனர். மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜனதா ஜி.எஸ்.டி. வரி என்ற பெயரில் பொதுமக்களை வஞ்சித்து வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாட்டு மக்கள் பா.ஜனதாவுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.