ஜி.எஸ்.டி. வரியில் ஒரே விகித முறை சாத்தியமா?- வியாபாரிகள், பொதுமக்கள் கருத்து
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழு தலைவர் தெரிவித்துள்ள ஜி.எஸ்.டி. வரியில் ஒரே விகித முறை சாத்தியமா? என்பது குறித்து வியாபாரிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜி.எஸ்.டி.
வரி விதிப்பு என்பது மன்னர் காலத்தில் இருந்தே தொன்றுதொட்டு வருகிறது. மக்கள் செலுத்தும் வரி மட்டும் இல்லை என்றால், அரசுகள் செயல்படமுடியாது. வரிகளின் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்தே அரசுகள் மக்கள் நலனுக்கான திட்டங்களை தீட்டி, செயல்படுத்துகின்றன. வரிகளை பொறுத்தமட்டிலும், நேரடி வரி மற்றும் மறைமுக வரி என்ற 2 பிரிவுகள் உள்ளன. அந்தவகையில், சரக்கு மற்றும் சேவை வரி என்ற ஜி.எஸ்.டி. மறைமுக வரியாகும். ஜி.எஸ்.டி. வரி முறையை உலகிலேயே முதலாவதாக 1954-ம் ஆண்டு பிரான்சு நாடு அறிமுகப்படுத்தியது.
தற்போது அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, சிங்கப்பூர், மியான்மர் உள்பட சுமார் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜி.எஸ்.டி. வரி நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவை பொறுத்தமட்டில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, 'ஒரே நாடு, ஒரே வரி' என்ற தலைப்பில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்தது. மத்திய கலால் வரி, கூடுதல் சுங்க வரி, சேவை வரி, பொழுதுப்போக்கு வரி, மதிப்பு கூட்டு வரி (வாட்) உள்பட வரிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட வரியாக ஜி.எஸ்.டி. இருக்கிறது.
ஒரே வரி விகிதம்
நாடு முழுவதும், மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. ஒரே மாநிலத்துக்குள் நடைபெறும் பரிவர்த்தனைகள் அனைத்துக்கும் அதாவது மத்திய ஜி.எஸ்.டி. (சி.ஜி.எஸ்.டி.) மத்திய அரசாலும், மாநில ஜி.எஸ்.டி. (எஸ்.ஜி.எஸ்.டி.) மாநில அரசினாலும் விதிக்கப்படுகிறது. அதன் வருவாயை மத்திய-மாநில அரசுகள் பகிர்ந்து கொள்கின்றன. மாநிலங்களுக்கிடையே நடைபெறும் பரிவர்த்தனைகள் மற்றும் சரக்கு அல்லது சேவை இறக்குமதிக்கு, ஒருங்கினைந்த ஜிஎஸ்டி (ஐ.ஜி.எஸ்.டி.) மத்திய அரசினால் விதிக்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி.யை பொறுத்தமட்டில், 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் ஆகிய 4 நிலைகளில்(சிலாப்ஸ்) வரி விதிக்கப்படுகிறது. தற்போதைய வரி விதிப்பு முறை என்பது, சேவை துறைகளுக்கு கட்டுமான உருவாக்கத்துக்கான நிதி தேவையை பூர்த்தி செய்ய இயலாத அளவுக்கு இருப்பதால், ஜி.எஸ்.டி.யில் ஒரே நிலையில் அதாவது விலக்கு எதுவும் இல்லாமல் ஒரே விகிதத்தில்(ஒரே சிலாப்) வரி விதிப்பினை கொண்டு வர வேண்டும் என்று பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் பிபேக் தேப்ராய் சமீபத்தில் தெரிவித்து இருக்கிறார்.
சாத்தியமா?
ஜி.எஸ்.டி. என்பது 'ஒரே நாடு ஒரே வரி' என்ற அடிப்படையில் உருவானது. நாடு முழுவதும் ஒரே சீராக விதிக்கப்படும் அதில், வரி விகிதங்களில் சில பிரிவுகள் இருக்கின்றன. பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவரின் கருத்து ஏற்கப்பட்டால், 'ஒரே நாடு ஒரே வரி' என்ற நிலையில் இருந்து 'ஒரே நாடு, ஒரே வரி, ஒரே வரி விகிதம்' என்ற நிலைக்கு ஜி.எஸ்.டி. மாறிவிடும். 'ஒரே ஜி.எஸ்.டி., ஒரே வரி' என்ற முன்மொழிவு சாத்தியமா? என்பது குறித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் மீதான சுமை குறையும்
இதுகுறித்து உணவு தானியங்கள் மொத்த வியாபாரி செந்தில் கூறுகையில், "சரக்கு-சேவை வரி (ஜ.எஸ்.டி.) தற்போது 4 வகையாக உள்ளது. அதனால் சில பொட்களின் விலை அதிகமாக உள்ளது. இது பொதுமக்களுக்கு சுமையை ஏற்படுத்துகிறது. அதனால் அவர்கள் பொருட்களை வாங்க தயக்கம் காட்டுகிறார்கள். தற்போது உள்ள 4 வகையான வரிகளை 2 ஆக குறைக்கலாம். சாமானிய மக்கள் பயன்படுத்தும் உணவு தானியங்கள் உள்ளிட்ட பொருட்கள் மீது 5 சதவீத வரியும், ஆடம்பர பொருட்கள் மீது 12 சதவீத வரியும் விதிக்கலாம். அவ்வாறு வரிகளை ஒருங்கிணைத்தால் நன்றாக இருக்கும். எங்களுக்கு வியாபாரமும் சிக்கல் இல்லாமல் நடைபெறும். பொதுமக்கள் மீதான சுமையும் குறையும். இந்த விஷயத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
உணவு பொருட்கள் வியாபாரி அலெக்ஸ் கூறும்போது, "ஜி.எஸ்.டி. வரி 4 வகையாக இருப்பதால் மக்களுக்கு சுமை ஏற்பட்டுள்ளது. இதை ஒருங்கிணைத்து சாமானிய மக்கள், வியாபாரிகள் பாதிக்கப்படாத வகையில் அவற்றை ஒருங்கிணைக்க வேண்டும். 4 வகையான வரிகளைகளை ஒருங்கிணைத்து ஒன்றாக குறைக்க வேண்டும். இதனால் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறுவார்கள். இந்த விஷயத்தில் மத்திய-மாநில அரசுகள் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்" என்றார்.
ஒரே விகித வரிவிதிக்க வேண்டும்
நகைக்கடை அதிபர் டி.ஏ.செந்தில், "ஜி.எஸ்.டி. 4 வகையாக இருப்பதால் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். பொதுமக்கள் மட்டுமின்றி வியாபாரிகளும் பல்வேறு சிக்கல்களை எதிர் கொள்கிறார்கள். நாங்கள் கணக்குகளை தாக்கல் செய்யும்போது, ஒவ்வொ முறையில் வரி வகையை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. அவ்வாறு செய்யும்போது,
சர்வர் வேகம் குறைந்து விரைவாக பணிகள் முடிவது இல்லை. இதனால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறோம். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் ஜி.எஸ்.டி. வரிகளை ஒருங்கிணைத்து ஒரே வகையாக நிர்ணயம் செய்ய வேண்டும். இதை செய்தால் நன்றாக இருக்கும். வரி சீர்திருத்த விஷயங்களில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதை செய்தால் எங்களுக்கு வரி கணக்கு தாக்கல் செய்வது எளிதாகும். மக்களுக்கும் சிரமம் இருக்காது. இவற்றை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.
துணி வியாபாரி கோபிநாத் கூறுகையில், "முன்பு சாதாரண ஜவுளி துணிகளுக்கு விரி விதிக்கப்படாமல் இருந்தது. ஜி.எஸ்.டி. வந்த பிறகு இந்த துணிகள் மீதும் வரி விதித்துள்ளனர். அவற்றுக்கு 5 சதவீத வரி யை விதித்து இருக்கிறார்கள். இதனால் எங்கள் துணி வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வரி உயர்வால் துணிகளின் விலை அதிகரித்துள்ளது. அதனால் பொதுமக்கள் துணிகள் வாங்க விரும்பவில்லை. அதனால் இந்த ஜி.எஸ்.டி வரியை ஒன்றாக ஒருங்கிணைத்து ஒரே வித வரியை நிர்ணியிக்க வேண்டும். அதாவது 5 சதவீத வரியை மட்டுமே விதிக்க வேண்டும்" என்றார்.
தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூருவை சேர்ந்த செந்தில்கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், "மத்திய அரசின் 4 விதமான ஜி.எஸ்.டி. வரியே சரியானது தான். ஆனால் வரி நிர்ணயித்த சதவீதம் குளறுபடியாக தான் உள்ளது. சரியான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை. வரி விதிக்கும் முன் அந்தந்த துறை சார்ந்த தொழில் செய்யும் நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து வரி விகிதத்தை நிர்ணயித்தால் அந்த குளறுபடிகள் நீங்கும். இந்த மாதம் கொள்முதல் செய்ததற்கான வரியை அடுத்த மாதமே கட்ட சொல்வது சரியல்ல. யார் பெயருக்கு பில் போடுகிறோமோ அவர்களே வரியை கொடுக்கிறார்கள். ஆனால் அவ்வாறு பெறும் வரியை முன்னதாகவே கட்ட சொல்வது சரியல்ல. தற்போதுள்ள வரி விகிதம் பயங்கர குளறுபடியானதால் தொழில் செய்பவர்கள் அதாவது குறு, சிறு தொழில் செய்பவர்கள் இக்கட்டான சூழ்நிலையை அடைந்துள்ளனர். ஒரு நிறுவனத்தினர் வரி கட்டுவதற்கு முன்பு அவர்களுடைய வரியை அவர்கள் வங்கி கணக்கிலிருந்து நேரடியாகவே அரசு எடுத்துக் கொள்வதும் சிறந்தது. மொத்தத்தில் தற்போதுள்ள வரி விகிதங்களால் சிறு குறு தொழில்கள் நஷ்டமே ஆகியுள்ளது. என்னை பொறுத்தவரை பழைய வரிவிகித முறையே சரியானது தான்" என்றார்.
பொருளாதார நிபுணர் கருத்து
பெங்களூருவை சேர்ந்த ஆடிட்டரும், பொருளாதார ஆலோசகருமான பாபு கே.தேவர் கூறியதாவது:-
சரக்குகள் மீது ஜி.எஸ்.டி. வரி 4 விதமாக அதாவது 5, 12, 18, 28 என்ற விகிதத்தில் வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த வரிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள். என்னை பொறுத்தவரையில் நான் கூறுவது என்னவென்றால், இந்த 4 வகையான வரிகளை இரண்டு ஆக ஒருங்கிணைத்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன். அதாவது சாமானிய மக்கள் பயன்படுத்தும் அரிசி, பருப்பு, சோப்புகள் போன்ற பொருட்கள் மீது 5 சதவீத வரியை விதிக்கலாம். அந்த பொருட்களை தவிர ஆடம்பர பொருட்கள் மீது 18 சதவீத வரியை நிர்ணயம் செய்யலாம்.
இந்த வரிகளை ஒருங்கிணைப்பதால் மத்திய-மாநில அரசுகளுக்கு வரிவருவாய் குறையுமா? என்றால் இல்லை என்று தான் கூறுகிறேன். 12 சதவீத நிலையில் உள்ள வரி 18 சதவீதமாக உயரும். 28 சதவீதமாக உள்ள வரி 18 சதவீதத்திற்கு வரும். குறைவான பொருட்களின் வரி அதிகரிக்கும், அதிக வரி உள்ள
பொருட்களின் வரி குறையும். இதன் மூலம் வரி வருவாயில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் சரியாகிவிடும். இவ்வாறு செய்தால் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.