குஜராத்: ஐஇஎல்டிஎஸ் தேர்வில் முறைகேடு - ஆங்கிலம் பேசத் தடுமாறிய மாணவர்கள் கனடா சென்றது அம்பலம்!
ஆங்கிலம் பேசத் தடுமாறிய மாணவர்கள், தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று எப்படி கனடா வந்தார்கள்? என்ற குழப்பம் ஏற்பட்டது.
ஆமதாபாத்,
ஆங்கிலம் சரிவர பேசத் தெரியாமல் அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற குஜராத் மாணவர்கள் குறித்து அதிச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, குஜராத்தில் ஐஇஎல்டிஎஸ் தேர்வில் முறைகேடு நடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம், கனடாவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற குஜராத்தைச் சேர்ந்த 6 இளைஞர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அவர்களால் ஆங்கிலத்தில் உரையாட முடியாமல் நின்றனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் ஆங்கில திறனறிவு தேர்வான ஐஇஎல்டிஎஸ் தேர்வில், 6.5 முதல் 7 வரை மதிப்பெண்கள் பெற்றிருந்தது தெரியவந்தது.
'ஐ இ எல் டி எஸ்' என்பது ஆங்கில மொழி புலமைக்கான சர்வதேச தரப்படுத்தப்பட்ட சோதனை தேர்வாகும். இதில் தேர்வாகும் மதிப்பெண்கள் மூலம் அமெரிக்கா, கனடா போன்ற வெளிநாடுகளில் சென்று பயில முக்கிய தகுதியாக பார்க்கப்படுகிறது.
ஆனால், ஆங்கிலம் பேசத் தடுமாறிய மாணவர்கள், ஆங்கிலப் புலமை தேர்வில் அதிகளவு மதிப்பெண்கள் பெற்று எப்படி கனடா வந்தார்கள்? என்ற குழப்பம் ஏற்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தும்படி அமெரிக்க அதிகாரிகள் கோரிக்கை விடுத்ததன் பேரில், குஜராத் மாநிலத்தின் மெஹ்சானா மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, முதற்கட்ட விசாரணையில், குஜராத்தில் ஐஇஎல்டிஎஸ் தேர்வில் முறைகேடு நடைபெற்றதும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்வில், தேர்வறையில் சிசிடிவி கேமராக்கள் செயலிழக்கச் செய்து வைக்கப்பட்டதும் தெரியவந்தது.
புத்திசாலித்தனமான மாணவர்கள் கூட இத்தேர்வில் 5 அல்லது 6 மதிப்பெண்களைப் பெற கடினமாக உழைக்க வேண்டும். அப்படியிருக்கையில், இந்த மாணவர்கள் முறைகேடாக அதிக மதிப்பெண் பெற்று வெளிநாட்டுக்கு சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்று வழக்கை விசாரித்துவரும் மூத்த போலீஸ் அதிகாரி கூறினார்.