குரு மடிவாளேஸ்வரா மடாதிபதி தற்கொலை; காரணம் என்ன?- பரபரப்பு தகவல்கள்


குரு மடிவாளேஸ்வரா மடாதிபதி தற்கொலை; காரணம் என்ன?- பரபரப்பு தகவல்கள்
x

பெலகாவி அருகே குரு மடிவாளேஸ்வரா மடத்தின் மடத்தின் பசவ சித்தலிங்க சுவாமி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெலகாவி:

ஆடியோ வைரல்

கர்நாடக சித்ரதுர்காவில் முருகா மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சிவமூர்த்தி முருகா சரணரு. இந்த நிலையில் மடத்திற்கு சொந்தமான விடுதியில் தங்கி படித்த 2 மாணவிகள் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது பாலியல் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் சிவமூர்த்தி முருகா சரணரு கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தார்வார் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணும், கொப்பல் மாவட்டத்தை சேர்ந்த இன்னொரு பெண்ணும் செல்போனில் பேசிய ஆடியோ வெளியானது.

அந்த ஆடியோவில் பாலியல் புகாருக்கு உள்ளான மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவை பற்றி 2 பெண்களும் பேசி இருந்தனர். மேலும் பெலகாவி மாவட்டம் பைலஒங்கலா பகுதியில் உள்ள குரு மடிவாளேஸ்வரா மடத்தின் மடாதிபதி பசவ சித்தலிங்க சுவாமியையும் பாலியல் புகார் விவகாரத்தில் தொடர்புபடுத்தி 2 பெண்களும் பேசியதாக சொல்லப்படுகிறது.

அந்த ஆடியோ வைரலாகி இருந்தது. இந்த நிலையில் பாலியல் புகார் வழக்கில் தனது பெயரும் அடிபட்டதால் மடாதிபதி பசவ சித்தலிங்க சுவாமி மனம் உடைந்து காணப்பட்டு உள்ளார்.

தூக்கில் தொங்கிய மடாதிபதி

மேலும் நேற்று முன்தினம் இரவு கூட மடத்தின் நிர்வாகிகள், பக்தர்கள் முன்பு பேசிய பசவ சித்தலிங்க சுவாமி தன்னை பற்றி 2 பெண்கள் பேசிய ஆடியோ தனது மனதை பாதித்து விட்டதாக கூறி இருந்தார். பின்னர் அவர் தனது அறைக்கு தூங்க சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் மடாதிபதியின் அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மடத்தின் நிர்வாகிகள் கதவை தட்டிப்பார்த்தனர்.

ஆனால் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது அறைக்குள் மடாதிபதி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பைலஒங்கலா போலீசார் சம்பவம் நடந்த மடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மடாதிபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கடிதம் சிக்கியது

இதற்கிடையே மடாதிபதியின் அறையில் இருந்து போலீசார் ஒரு கடிதத்தை கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில் நான் எந்த தவறும் செய்யவில்லை. எனது மரணத்திற்கு நானே பொறுப்பு. எனது மரணம் தொடர்பாக யாரிடமும் விசாரிக்க வேண்டாம். இந்த உலகில் வாழ விருப்பம் இல்லை. அம்மா என்னை மன்னித்து விடுங்கள். மடத்தின் நிர்வாகிகள், பக்தர்கள் அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். மடத்தின் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் மடத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று உருக்கமாக எழுதி இருந்தார்.

பரபரப்பு

மடாதிபதியின் தற்கொலை குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தன்னை பற்றி 2 பெண்கள் செல்போனில் பேசிய ஆடியோ வைரல் ஆனதால் தனது பெயர், புகழுக்கு களங்கம் ஏற்பட்டதாக கருதி மடாதிபதி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மடாதிபதி உயிரிழந்த சம்பவம் குறித்து பைலஒங்கலா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பாலியல் புகாரில் ஒரு மடாதிபதி போலீசாரின் விசாரணையில் உள்ள நிலையில் அந்த வழக்கில் தனது பெயர் அடிபட்டதால் இன்னொரு மடாதிபதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story