ஜார்க்கண்டில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்த இளம்பெண் 10 பேர் கும்பலால் கூட்டு பலாத்காரம் - 7 பேர் கைது!


ஜார்க்கண்டில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்த இளம்பெண் 10 பேர் கும்பலால் கூட்டு பலாத்காரம் - 7 பேர் கைது!
x
தினத்தந்தி 23 Oct 2022 7:35 PM IST (Updated: 23 Oct 2022 7:45 PM IST)
t-max-icont-min-icon

இரண்டு சிறார்கள் உட்பட 7 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டது.

ராஞ்சி,

ஜார்க்கண்டில் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் பிரபல ஐ.டி. நிறுவனத்தில் மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றி வருகிறார். கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு வீட்டில் இருந்தபடியே அவர் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில், தனது ஆண் நண்பர் ஒருவருடன் கடந்த 20ஆம் தேதியன்று மாலையில் மோட்டார் பைக்கில் வெளியே சென்றுள்ளார். அந்த ஜோடியை 8 முதல் 10 பேர் கொண்ட கும்பல் நடுவழியில் மறித்து உள்ளது.

இதன்பின், அந்த ஆண் நண்பரை அடித்து, தாக்கி விட்டு இளம்பெண்ணை மறைவான இடத்திற்கு கும்பல் கடத்தி சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இதன்பின்னர் அந்த கும்பல் சம்பவ பகுதியில் இருந்து தப்பியோடி விட்டது. அதற்கு முன்பு, இளம்பெண்ணிடம் இருந்த மொபைல் போன் மற்றும் பர்ஸ் உள்ளிட்டவற்றை பறித்து சென்று விட்டது.

இதன்பின்னர், அந்த பெண் வீடு வந்து சேர்ந்துள்ளார். குடும்பத்தினரிடம் நடந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. உள்ளூர் மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என போலீஸ் சூப்பிரெண்டு அஷுதோஷ் சேகர் கூறினார்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்நிலையில், இரண்டு சிறார்கள் உட்பட 7 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டது.


Next Story