வியாபாரியின் மனைவியை தாக்கி ரூ. 5 லட்சம் கொள்ளை
வீடு புகுந்து வியாபாரியின் மனைவியை தாக்கி மர்மநபர்கள் ரூ. 5 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து விட்டு சென்றனர்.
தாவணகெரே-
தாவணகெரே மாவட்டம் குந்துவாடா அருகே உள்ள லேக்யூவ் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். வியாபாரி. இவரது மனைவி யோகேஸ்வரி. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் ஸ்ரீகாந்த சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்றிருந்தார். வீட்டில் யோகேஸ்வரி மட்டும் தனியாக இருந்தார். அப்போது ஸ்ரீகாந்த் வீட்டிற்கு 4 பேர் வந்தனர். அவர்கள் யோகேஸ்வரியிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர். அவர் குடிப்பதற்கு தண்ணீர் எடுக்க வீட்டிற்குள்ளே சென்றார்.
அப்போது பின்னால் சென்ற மர்மநபர்கள் யோகேஸ்வரியை கல்லால் தாக்கினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து மர்மநபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு சென்றனர். பின்னர் ஸ்ரீகாந்த் வீடு திரும்பினார். அப்போது மனைவி மயக்க நிலையில் இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ. 5 லட்சத்தை காணவில்லை. வீடு புகுந்து மனைவியை மர்மநபர்கள் தாக்கிவிட்டு பணத்தை கொள்ளையடித்து விட்டு சென்றது அவருக்கு தெரியவந்தது.
இதையடுத்து யோகேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக தாவணகெரே தனியார் ஆஸ்பத்திரியில் ஸ்ரீகாந்த் சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வித்யாநகர் போலீசில் ஸ்ரீகாந்த் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.