வீட்டுக்கே வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த எச்.டி.தேவேகவுடாவை பார்த்து ஆனந்த கண்ணீர்விட்ட ஜி.டி.தேவேகவுடா


வீட்டுக்கே வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த எச்.டி.தேவேகவுடாவை பார்த்து ஆனந்த கண்ணீர்விட்ட ஜி.டி.தேவேகவுடா
x
தினத்தந்தி 21 Oct 2022 12:30 AM IST (Updated: 21 Oct 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

மைசூருவில் உள்ள தனது வீட்டுக்கே வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த எச்.டி.தேவேகவுடாவை பார்த்து ஜி.டி.தேவேகவுடா ஆனந்த கண்ணீர்விட்டார்.

மைசூரு;


ஜனதாதளம்(எஸ்) கட்சி கூட்டம்

மைசூருவில் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் மந்திரிகள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆனால் கட்சி மீது அதிருப்தியில் இருக்கும் ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ. மட்டும் கலந்துகொள்ளவில்லை.

நேற்று முன்தினம் தொடங்கிய கூட்டத்தில் முன்னாள் பிரதமரும், கட்சியின் தேசிய தலைவருமான எச்.டி.தேவேகவுடா கலந்துகொள்ள இருந்தார்.ஆனால், உடல் நலக்குறைவு காரணமாக அவர் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் நேற்று நடந்த கூட்டத்தில் எச்.டி.தேவேகவுடா கலந்துகொண்டார்.


ஜி.டி.தேவேகவுடாவுடன் சந்திப்பு

முன்னதாக அவர், கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மைசூருவுக்கு வந்த எச்.டி.தேவேகவுடா, போகாதி பகுதியில் உள்ள ஜி.டி.தேவேகவுடாவின் வீட்டுக்கு குமாரசாமியுடன் சென்றார். பின்னர் அவரை சந்தித்து எச்.டி.தேவேகவுடாவும், குமாரசாமியும் பேசினர். எந்த தகவலும் இன்றி எச்.டி.தேவேகவுடாவும், குமாரசாமியும் தனது வீட்டுக்கு வந்ததை பார்த்து ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ. இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

அவர்களை பொன்னாடை போர்த்தி வரவேற்றார். மேலும், எச்.டி.தேவேகவுடா, குமாரசாமியை பார்த்து சந்தோஷத்தில் அவர் கண்கலங்கினார். அப்போது, கட்சியில் இருந்து விலக வேண்டாம் என்று அவர்கள் ஜி.டி.தேவேகவுடாவிடம் கேட்டதாக தெரிகிறது. இதனை ஏற்று கொண்ட அவர், கட்சியை விட்டு விலக மாட்டேன் என்றும், கட்சியை வளர்க்க பாடுபடுவேன் என்றும் உறுதி அளித்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர், எச்.டி.தேவேகவுடா, குமாரசாமியுடன் கட்சியின் கூட்டம் நடந்த ஓட்டலுக்கு சென்று கலந்துகொண்டார்.

விலகும் முடிவை...

ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான ஜி.டி.தேவேகவுடா, கடந்த சில மாதங்களாக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்து வந்தார். கட்சி தலைவர்கள் மீது அதிருப்தியில் இருந்து வந்த அவர், அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸ் இணைய இருந்ததாக தகவல்கள் வெளியானது.

மேலும் அவரது மகனுக்கு காங்கிரசில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் சீட் வாங்கி கொடுக்கவும் திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. தற்போது எச்.டி.தேவேகவுடா, குமாரசாமி ஆகியோர் ஜி.டி.தேவேகவுடாவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதன் மூலம், அவர் கட்சியில் இருந்து விலகும் முடிவை கைவிட்டதாக தெரிகிறது.


Next Story