பா.ஜனதா ஆட்சியில் ஊழல் இல்லை என கூறவில்லை; சி.டி.ரவி எம்.எல்.ஏ. பேட்டி
பா.ஜனதா ஆட்சியில் ஊழல் இல்லை என கூறவில்லை என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.
பெங்களூரு:
பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ. டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி ஊழலின் பிதாமகன். ஊழல் விதையை விதைத்ததே அக்கட்சி தான். எங்கள் அரசு மீது ஊழல் புகார்களை கூறுவதை காங்கிரஸ் தலைவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஊழல் புகார்களுக்கு ஏதாவது ஆதாரம் இருந்தால், அவர்கள் கோர்ட்டுக்கு செல்லலாம். எங்கள் அரசு மீது 40 சதவீத கமிஷன் புகார் கூறினர். அதன்பிறகு என்ன நடந்தது. நிலம், நீர், காற்றில் ஊழல் செய்தவர்கள் காங்கிரஸ் தலைவர்கள்.
பா.ஜனதா ஆட்சியில் ஊழல் இல்லை என்று கூறவில்லை. நிர்வாக அமைப்பிலேயே ஊழல் சேர்ந்து கொண்டுள்ளது. நாங்கள் தேர்தல் அறிக்கையில் கூறாத பல திட்டங்களை அமல்படுத்தியுள்ளோம். பூத் மட்டத்தில் நாங்கள் கட்சியை பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இது எங்களுக்கு வெற்றியை தேடித்தரும். மார்ச் முதல் வாரத்தில் யாத்திரைகளை தொடங்க உள்ளோம். இதன் மூலம் பா.ஜனதா மேலும் பலமடையும். நாட்டை பா.ஜனதா உடைக்கவில்லை. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அதை உடைத்ததே காங்கிரஸ். நாங்கள் சாதி, மதங்களை வைத்து அரசியல் செய்யவில்லை.
இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.