கன மழைக்கு இளம் பெண் பலி


கன மழைக்கு இளம் பெண் பலி
x

பலியான இளம் பெண் பெங்களூருவில் புதிதாக வாங்கிய வீட்டை குடும்பத்திற்கு காண்பிக்க ஆந்திராவில் இருந்து இளம்பெண் அழைத்து வந்திருந்தது தெரியவந்துள்ளது.

பெங்களூரு:-

புதிய வீடு வாங்கினார்

பெங்களூரு விதானசவுதா அருகே கே.ஆர்.சர்க்கிளில் உள்ள சுரங்க பாதையில் தேங்கி நின்ற மழைநீரில் கார் சிக்கி கொண்டு இருந்ததால் இளம்பெண்ணான பானு ரேகா பலியாகி இருந்தார். இன்போசிஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்த அவரை பற்றிய சோகமான தகவல் வெளியாகி உள்ளது. பானு ரேகாவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் ஆகும். பெங்களூருவில் தங்கி இருந்து அவர் வேலை பார்த்து வந்திருந்தார்.

சமீபத்தில் பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி அருகே பிரகதிநகரில் புதிதாக ஒரு வீட்டை பானு ரேகா விலைக்கு வாங்கி இருந்தார். அந்த வீடு எப்படி உள்ளது என்பதை தன்னுடைய குடும்பத்திற்கு காண்பிக்க அவர் விரும்பினார். இதற்காக ஆந்திராவில் இருந்துதனது குடும்பத்தை சேர்ந்த 5 பேரை பெங்களூருவுக்கு வரவழைத்திருந்தார். புதிய வீட்டை பார்த்து விட்டு, கப்பன் பூங்காவுக்கு வாடகை காரில் சென்றிருந்தனர்.

டாக்டர்களின் அலட்சியம்

அங்கிருந்து திரும்பி வரும் போது சுரங்க பாதையில் தேங்கி நின்ற மழை நீரில் கார் சிக்கி பானு ரேகா பலியாகி இருந்தார். கே.ஆர்.சர்க்கிளில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் தான் தீயணைப்பு நிலையம் உள்ளது. கார் தண்ணீருக்குள் சிக்கியதும், பொதுமக்கள், தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து காருக்குள் மயங்கியபடி இருந்த பானு ரேகாவை மீட்டு இருந்தார்கள். ஆனால் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பானு ரேகாவுக்கு 20 நிமிடத்திற்கு மேல் டாக்டர்கள் சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

குடும்பத்தினர் சிகிச்சை அளிக்கும்படி கூறியும் டாக்டர்கள் சிகிச்சை அளிக்காமல் இருந்ததாகவும், பானு ரேகாவுக்கு உடனடியாக சிகிச்சை கிடைத்திருந்தால், அவர் உயிர் பிழைத்திருப்பார் என்றும் குடும்பத்தினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். இதற்கிடையில், சுரங்க பாதைக்குள் கார் சிக்கியது, பானு ரேகா மீட்கப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த காட்சிகள் பதைபதைக்கும் விதமாக உள்ளது.


Next Story