பயங்கரவாதிகளுக்கு பண உதவி செய்த4 பேர் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை


பயங்கரவாதிகளுக்கு பண உதவி செய்த4 பேர் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை
x

பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து கைதான பயங்கரவாதிகளுக்கு பண உதவி செய்த 4 பேர் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இது கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு:-

குக்கர் குண்டு வெடிப்பு

கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூரு மற்றும் மைசூரு, மங்களூரு உள்ளிட்ட நகரங்களில் பயங்கரவாத செயல்கள் அடிக்கடி நடந்து வருகிறது. பெங்களூருவில் குண்டுவெடிப்பு சம்பவங்களும் நடந்துள்ளன. அதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்(என்.ஐ.ஏ.) பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் அடிக்கடி சோதனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் மைசூரு, கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி ஆகிய மாவட்டங்களிலும் அடிக்கடி குண்டுவெடிப்பு சம்பவங்களும், சட்டவிரோத செயல்களும், கலவரங்களும் நடந்து வந்தன.

குறிப்பாக கடந்த ஆண்டு(2022) நவம்பர் மாதம் 19-ந் தேதி தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே நாகுரி பகுதியில் ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட குக்கர் வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதுதொடர்பாக ஷாரிக் என்ற பயங்கரவாதியை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கார் வெடிப்பு சம்பவம்

இதற்கு முன்னதாக தமிழ்நாட்டில் உள்ள கோவை டவுனில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஜமேஷா முபின் என்ற பயங்கரவாதி காருடன் எரிந்து உயிரிழந்தார். இவற்றுக்கு முன்னதாக தமிழ்நாடு-கேரளா எல்லையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவங்களில் தொடர்புடைய பயங்கரவாதிகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தனியார் இஸ்லாமிய ஊடகம் மூலம் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கோவை மற்றும் மங்களூருவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு தங்கள் அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்து இருந்தது. மேலும் தங்கள் அமைப்பினர் தொடர்ந்து இதுபோல் தங்களது போராட்டத்தை(பயங்கரவாதத்தை) நிகழ்த்துவார்கள் என்றும் கூறியிருந்தது.

பயங்கரவாதிகள் கைது

இதனால் என்.ஐ.ஏ. அதிகாரிகள் உஷாரானர்கள். மேலும் அவர்கள் கர்நாடகா, தமிழகம் மற்றும் கேரளாவில் தங்களது சோதனையையும், விசாரணையையும் தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் ஏற்கனவே கைதாகி இருக்கும் பயங்கரவாதிகளிடமும் விசாரணை நடத்தி தகவல்களைப் பெற்று அதன்மூலமும் சில பயங்கரவாதிகளை கைது செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் பீகார் மாநிலம் பாட்னாவில் பிரதமர் நரேந்திர மோடி பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசினார். அந்த பொதுக்கூட்டத்தை சீர்குலைக்கவும், நாசவேலையில் ஈடுபடவும் சில பயங்கரவாதிகள் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் சில பயங்கரவாதிகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து இருந்தார்கள்.

ஆவணங்களை கைப்பற்றினர்

இந்த நிலையில் நேற்று தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் அருகே நந்தவரா பகுதியில் வசித்து வரும் முகமது சினான், இக்பால், சர்பாஸ் நவாஸ் மற்றும் நவ்பால் ஆகிய 4 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீரென வந்து அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவர்கள் 4 பேரின் வீடுகளில் இருந்து பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். செல்போன்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவற்றையும் கைப்பற்றி எடுத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பீகாரில் நடந்த பிரதமர் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து கைதான பயங்கரவாதிகளுக்கு முகமது சினான் உள்பட 4 பேரும் பண உதவி செய்ததாக கிடைத்த தகவலின்பேரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவர்களது வீடுகளில் சோதனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

காவலில் வைத்து விசாரணை

அதாவது கைதான பயங்கரவாதிகளின் வங்கி கணக்குகளுக்கு இவர்கள் 4 பேரும் பல்வேறு தவணைகளில், பல வங்கி கணக்குகளில் இருந்து பல கோடி ரூபாயை ஆன்லைன் மூலம் பரிமாற்றம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த பணப்பரிமாற்றம் அனைத்து டார்க்நெட் இணையதளம் மூலம் நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த தகவல்களின் அடிப்படையில் முகமது சினான் உள்ளிட்ட 4 பேரின் வீடுகளிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மேலும் முகமது சினான், இக்பால், சர்பாஸ் நவாஸ், நவ்பால் ஆகிய 4 பேரையும் பிடித்துச் சென்று தங்கள் காவலில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கோவை, மங்களூருவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்த அடுத்த நாளே இந்த 4 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாதிகளுக்கு பண உதவி செய்த 4 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்திருக்கும் சம்பவம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story