வேறு மத பெண்ணை திருமணம் செய்ய முயன்ற முஸ்லிம் வாலிபரை தாக்கிய இந்து அமைப்பினர்


வேறு மத பெண்ணை திருமணம் செய்ய முயன்ற முஸ்லிம் வாலிபரை தாக்கிய இந்து அமைப்பினர்
x
தினத்தந்தி 16 Sept 2022 12:15 AM IST (Updated: 16 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூருவில், வேறு மத பெண்ணை திருமணம் செய்ய முயன்ற முஸ்லிம் வாலிபரை இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தி தாக்கிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

சிக்கமகளூரு;

காதல் திருமணம்

சிக்கமகளூரு அருகே லட்சுமிபுராவில் முஸ்லிம் வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இதேபோல் அதேப்பகுதியில் இந்து பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்த நிலையில் காதல் ஜோடி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதுபற்றி அவர்கள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

அப்போது பெற்றோர், திருமணத்திற்கு பச்சை கொடி காட்டியதாக கூறப்படுகிறது. அதன்படி சிக்கமகளூரு டவுன் ராமனஹள்ளி சாலையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொள்ள சென்றனர்.

வாலிபர் மீது தாக்குதல்

இதையறிந்த இந்து அமைப்பினர் 4 பேர் அங்கு விரைந்து வந்து முஸ்லிம் வாலிபரை பிடித்து அடித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த சிக்கமகளூரு மகளிர் போலீசார், பசவனஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே போலீசார் வருவதை அறிந்த 4 பேரும் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர்.

அப்போது முஸ்லிம் வாலிபர், போலீசாரிடம் நடந்தவற்றை தெரிவித்து புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் காதல் ஜோடியை மீட்டனர். இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் இந்து அமைப்பை சேர்ந்த 4 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story