ரூ.5 லட்சத்திற்கு ஆரோக்கிய காப்பீடு திட்டம்
கர்நாடகத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்காக ரூ.5 லட்சத்திற்கு ஆரோக்கிய காப்பீடு திட்டம் தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:-
மாற்றுத்திறனாளிகள் தினம்
பெங்களூரு கன்டீரவா உள்விளையாட்டு அரங்கில் நேற்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியை முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை தொடங்கி வைத்தார். இதில், மந்திரி அசோக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
ரூ.5 லட்சம் காப்பீடு திட்டம்
கடவுளின் பிள்ளைகள் தான் மாற்றுத்திறனாளிகள். மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக சிறப்பு ஆரோக்கிய காப்பீடு திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதாவது ரூ.5 லட்சத்திற்கு இந்த ஆரோக்கிய காப்பீடு திட்டம் இருக்கும். இந்த திட்டத்திற்கு தேவையான நிதி அடுத்த பட்ஜெட்டில் ஒதுக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகள் செய்ய அரசு தயாராக இருக்கிறது. அரசு சார்பில மக்களுக்கு இலவச வீடுகள் வழங்கப்படும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் வரும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச வீடு கிடைக்கும் வகையில் 3 சதவீதம் ஒதுக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கப்படும் 3 சக்கர வாகனங்களுக்காக ரூ.28 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் திறமையானவர்கள்
மாற்றுத்திறனாளிகளுக்காக 2 ஆயிரம் சைக்கிள்களும் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக எந்தெந்த திட்டங்கள் கொண்டு வரலாம் என்பது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனிப்பட்ட திறமை இருக்கிறது. மற்ற மனிதர்களுக்கு உடலில் உள்ள அனைத்து பாகங்களும் சிறப்பாக இருந்தாலும், அவர்களது எண்ணம், செயல்பாடு சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது.
எனவே மாற்றுத்திறனாளிகள் தங்களை பற்றி நினைத்து வருந்தி கொள்ள கூடாது. மற்ற மனிதர்களுடன் ஒப்பிடுகையில் மாற்றுத்திறனாளிகளும் திறமையானவர்கள். உங்களை நீங்கள் எக்காரணம் கொண்டும் தாழ்வாக நினைத்து கொள்ள கூடாது. நீங்கள் அனைவரும் கடவுளின் பிள்ளைகள்.. மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கடவுள் வழங்குவார்.
நல்ல நிலையை அடைவோம்...
வாழ்க்கையில் நல்ல நிலையை அடைவோம் என்ற நம்பிக்கை மாற்றுத்திறனாளிகளிடம் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளை அனுதாபத்துடன் பார்க்க வேண்டிய நிலை இருக்க கூடாது. உங்களை சக்தி வாய்ந்தவர்களாக மாற்றும் பொறுப்பு இந்த சமூகத்திற்கு இருக்கிறது.
மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையுடன் இருந்து வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல வேண்டும். மாற்றுத்திறனாளிகள் தற்போது ஒவ்வொரு துறையிலும் சாதித்து வருகிறார்கள். இது பாராட்டத்தக்கது. அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.