பெங்களூருவில் இதய வடிவிலான போக்குவரத்து சிக்னல்கள்


பெங்களூருவில் இதய வடிவிலான போக்குவரத்து சிக்னல்கள்
x
தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இதய வடிவிலான போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளது

பெங்களூரு: பெங்களூருவில் கப்பன் பூங்கா, எம்.ஜி.ரோடு, ஜெயநகர் உள்பட பல பகுதிகளில் உள்ள சிக்னல்களில் இதய வடிவில் சிவப்பு நிற எச்சரிக்கை விளக்கு ஒளிரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பெங்களூரு போக்குவரத்து துறை சார்பில் கூறப்பட்டதாவது:-

பெங்களூருவில் உள்ள சிக்னல்களில் சில இடங்களில் இதய வடிவில் எச்சரிக்கை விளக்கு தெரியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மணிப்பால் ஆஸ்பத்திரி, போக்குவரத்து துறை மற்றும் பெங்களூரு மாநகராட்சியின் கூட்டு முயற்சியில் இது செயல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு உயிரும் முக்கியம் என்பதை உணர்த்தும் விதமாக அவை உள்ளன. மேலும், அந்த இதய வடிவத்தை கியூ-ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்தால் விபத்து போன்றவற்றில் சிக்குபவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்வதற்கான வழிகாட்டுதல்களை அரிய உதவும். மேலும் அதன் மூலம் அவசர உதவி தேவைப்படுபவர்கள் அருகில் உள்ள ஆம்புலன்ஸ் ஊழியர்களை தொடர்பு கொள்ள முடியும். முதற்கட்டமாக கப்பன் பூங்கா, மணிப்பால் பழைய ஏர்போர்ட்டு ரோடு, குண்டலஹள்ளி, சர்ஜாப்புரா சாலை, டிரினிட்டி சர்க்கிள் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள சிக்னல்களில் இந்த முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. கூடிய விரைவில் பிற இடங்களிலும் இதயவடிவிலான சிக்னல்கள் செயல்பாட்டுக்கு வரும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Next Story