கர்நாடகத்தில் இன்று 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்


கர்நாடகத்தில் இன்று 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்
x

கர்நாடகத்தில் இன்று 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. ராமநகர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அர்க்காவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் சன்னப்பட்டணா டவுனில் உள்ள பி.டி.காலனியை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. மண்டியாவில் பெய்து வரும் கனமழையால் மத்தூர் அருகே மைசூரு-பெங்களூரு சாலையை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. துமகூரு மாவட்டம் மதுகிரி, கொரட்டகெரே, உலியூர்துர்கா பகுதியிலும் கனமழை பெய்தது. உலியூர்துர்கா பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டனர். சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபித்தனூரில் பெய்த கனமழையால் குஷாவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் ஆற்றுப்பாலத்தை கடக்க முயன்ற 2 வாலிபர்கள் அடித்து செல்லப்பட்டனர். அதில் பிரசாந்த் என்ற வாலிபர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் நேற்று பசவராஜ் என்ற வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார். இதுபோல கவுரிபித்தனூர் அருகே காதலவேணி என்ற கிராமத்தில் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கிருஷ்ணப்பா என்பவரும் உயிருடன் மீட்கப்பட்டார். இதற்கிடையே கர்நாடகத்தில் இன்று 25 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்று கூறியுள்ளது.


Next Story