பெங்களூருவில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

வெப்ப சலனம் காரணமாக பெங்களூருவில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு:-
கோடை வெயில்
கர்நாடகத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. சுட்டெரித்து வரும் வெயிலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மாநிலத்தில் பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது கோடை மழை பெய்தாலும், உஷ்ணமான நிலையே நீடித்து வருகிறது. இந்த கோடை வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் படாதபாடு பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
24 மணி நேரத்தில் கனமழை
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கர்நாடகத்தில் இந்த ஆண்டு கோடை வெயில் வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் கூடுதலாக உள்ளது. கலபுரகியில் அதிகப்பட்ச வெயில் அளவு பதிவாகி வருகிறது. பெங்களூருவை பொறுத்தவரை அதிகபட்சம் 95 டிகிரி முதல் குறைந்தபட்சம் 72 டிகிரி வரை வெப்பம் பதிவாகும்.
வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் பெங்களூரு, குடகு, மைசூரு, சிக்கமகளூரு, மண்டியா, சாம்ராஜ்நகர் மாவட்டங்களிலும், கடலோர மற்றும் வடக்கு உள்மாவட்டங்களில் சில பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பெங்களூருவில் பகலில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இரவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.