சிக்கமகளூருவில் சூறைக்காற்றுடன் பலத்த மழை: ஸ்கூட்டர் மீது மரம் சாய்ந்து விழுந்து வளையல் கடைக்காரர் சாவு
சிக்கமகளூருவில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் ஸ்கூட்டர் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் வளையல் கடைக்காரர் உயிரிழந்தார்.
சிக்கமகளூரு-
சிக்கமகளூருவில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் ஸ்கூட்டர் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் வளையல் கடைக்காரர் உயிரிழந்தார்.
பலத்த மழை
கர்நாடகத்தில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் மக்களை சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாநிலத்தில் பெங்களூரு, சிக்கமகளூரு, சிவமொக்கா, மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் பல்வேறு பகுதிகளில் மரம் முறிந்து விழுந்து பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிக்கமகளூருவில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தது.
வளையல் கடைக்காரர் சாவு
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா சிக்கஹல்லா பகுதியில் வசித்து வந்தவர் வேணுகோபால் (வயது 45). வடகர்நாடகத்தை சேர்ந்த அவர், மூடிகெரேயில் பகுதியில் தங்கி வளையல் கடை நடத்தி வந்தார். மேலும் வேணுகோபால் அந்தப்பகுதியில் 'ஹோம் ஸ்டே'வும் நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேணுகோபால் தனது ஸ்கூட்டரில் வெளியே சென்றார். அப்போது சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் அவர் வேகமாக வீட்டுக்கு செல்ல முயன்றார்.
அந்த சமயத்தில், பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அங்கு நின்ற 3 மரங்கள் அடுத்தடுத்து சாய்ந்து விழுந்தன. அப்போது ஒரு மரம் வேணுகோபால் சென்ற ஸ்கூட்டர் மீது விழுந்தது. இதில் மரத்தின் இடிபாடுகளிடையே சிக்கி வேணுகோபால் பரிதாபமாக உயிரிழந்தார்.
கார் சேதம்
மேலும் மூடிகெரே, கலசா தாலுகாவில் பலத்த மழையால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. பனகல் அருகே மரம் சாய்ந்து விழுந்ததில் ரஷித் என்பவரின் கார் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் கிராமப்புறங்களில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
சிக்கமகளூருவில் பெய்த கனமழையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.