கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
‘பிப்பர் ஜாய்’ புயல் எதிரொலியாக கடலோர மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
மங்களூரு-
'பிப்பர் ஜாய்' புயல் எதிரொலியாக கடலோர மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
'பிப்பர் ஜாய்' புயல்
அரபிக்கடல் பகுதியில் பிப்பர் ஜாய் புயல் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு, பெல்தங்கடி, சுள்ளியா, மூடபித்ரி ஆகிய பகுதிகளில் நேற்று விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால் மழை நீர் பெருக்கெடுத்து தாழ்வான பகுதிகளுக்குள் புகுந்தது. மேலும் கால்வாய் நீர், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். இதேபோல அரபிக்கடல் பகுதியில் கடல் சீற்றம் அதிகளவு காணப்பட்டதால் கரைகளில் மண்ணரிப்பு ஏற்பட்டது.
பணம்பூர் கடற்கரை, சித்தாபுரா தண்ணீர் பாவி கடற்கரையில் அதிகளவு கடல் சீற்றம் இருந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல உடுப்பி மாவட்டம் கார்கலா, பைந்தூரு, குந்தாபுரா, கொல்லூர் பகுதிகளில் பகலில் வெயில் காணப்பட்டது. பின்னர் மாலையில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
மீனவர்களுக்கு தடை
இதேபோல உத்தர கன்னடா மாவட்டம் கார்வார், பட்கல், முருடேஸ்வர் பகுதியில் மாலையில் கன மழை பெய்தது. இந்த மழையால் உத்தரகன்னடா மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் அதிகளவு காணப்பட்டது. நகரப்பகுதியில் இந்த மழை குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அடுத்த புதன் கிழமை வரை இந்த கனமழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கடல் பகுதிக்கு செல்லும் மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார். அதே நேரம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசு அதிகாரிகளும் மழை பாதிப்பு பகுதிகளில் நேரில் ெசன்று ஆய்வு செய்து வருகின்றனர்.