போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து அமைப்பினர் கைது
பெங்களூருவில் கோவில் தேரோட்டத்தில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு:-
கோவில் தேரோட்டம்
பெங்களூரு வி.வி.புரம் பகுதியில் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேரோட்டம் நடப்பது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக இந்து அமைப்புகள் சார்பில், தேரோட்டத்தின்போது முஸ்லிம் வியாபாரிகளுக்கு கடைகள் அமைக்க அனுமதி வழங்க கூடாது எனவும், மீறினால் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே தேரோட்டம் குறித்து எம்.எல்.ஏ. உதய் கருடாச்சர் கூறுகையில், தேரோட்டத்தில் கடை வைத்து வியாபாரம் செய்யும் முஸ்லிம்களால் எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் பிழைப்பை கெடுக்க வேண்டாம். இந்துக்கள் அமைதியான முறையில் தேரோட்டத்தை நடத்த வேண்டும்' என கூறி இருந்தார்.
போலீசார் குவிப்பு
இதற்கு இந்து அமைப்பினர் கண்டனத்தை வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று சுப்ரமணிய சுவாமி கோவிலில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்து முடிந்தது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக கோவிலை சுற்றி உள்ள பகுதியில் 700 போலீசார் குவிக்கப்பட்டனர்.
முஸ்லிம் வியாபாரிகளுக்கு கடைகள் அமைக்க அனுமதி அளித்ததை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற இந்து அமைப்பினரை அனுமந்தநகர் போலீசார் கைது செய்தனர். தேரோட்டம் நடைபெற்ற வீதிகளில் வியாபாரம் செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டு இருந்தது. பிற பகுதியில் கடைகள் வைத்து வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.