முகலாய பேரரசு மீது மட்டுமே வரலாற்று ஆசிரியர்கள் கவனம் செலுத்தி உள்ளனர் - அமித் ஷா பேச்சு
பாண்டியர்கள், பல்லவர்கள் பற்றிய குறிப்பு நூல்கள் எழுதப்படவில்லை என அமித் ஷா பேசினார்.
புதுடெல்லி,
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா டெல்லியில் இன்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் வரலாற்றாசிரியர்கள் முகலா பேரரசுகள் மீது மட்டுமே கவனம் செலுத்தி அவர்களைப் பற்றி அதிகம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.
இந்த விழாவில் உள்துறை மந்திரி அமித் ஷா பேசியதாவது :
வரலாற்று ஆசிரியர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். எங்களிடம் பல பேரரசுகள் உள்ளன. ஆனால் வரலாற்று ஆசிரியர்கள் முகலாயர்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தி அவர்களைப் பற்றி அதிகம் எழுதியுள்ளனர்.
பாண்டியப் பேரரசு இங்கு 800 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளனர். அஹோம் பேரரசு 650 ஆண்டுகள் அசாமை ஆண்டனர். அவர்கள் அவுரங்கசீப் போன்றோரை வீழ்த்தி இருந்தனர். பல்லவப் பேரரசு 600 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். சோழர்கள் 600 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்
மௌரியர்கள் முழு நாட்டையும் ஆப்கானிஸ்தான் முதல் இலங்கை வரை 550 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். குப்தர்கள் 400 ஆண்டுகள் ஆட்சி செய்தனர் மற்றும் குப்தப் பேரரசர் சமுத்திரகுப்தர் முதன்முறையாக ஒன்றுபட்ட ஒரு பேரரசை நிறுவினார். ஆனால் அவர்களைப் பற்றிய குறிப்பு புத்தகம் இல்லை.
வரலாற்றை எழுதியவர்கள் முகலாய பேரரசுகளை மட்டுமே விவாதித்தார்கள். பாண்டியர்கள், அஹோம்கள், பல்லவர்கள், மௌரியர்கள் மற்றும் குப்தர்கள் போன்ற ராஜ்ஜியங்கள் 500 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தன மற்றும் வீரத்துடன் போரிட்டன, ஆனால் அவைகளில் குறிப்பு நூல்கள் எழுதப்படவில்லை.
இவ்வாறு அமித் ஷா கூறினார்.