சட்டசபை தேர்தலையொட்டி உள்துறை மந்திரி அமித்ஷா கர்நாடகம் வருகை


சட்டசபை தேர்தலையொட்டி உள்துறை மந்திரி அமித்ஷா கர்நாடகம் வருகை
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று கர்நாடகம் வந்தார். இன்று (சனிக்கிழமை) உப்பள்ளி-தார்வார், பெலகாவியில் நடைபெறும் கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார்.

பெங்களூரு:

அடிக்கல் நாட்டுகிறார்

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி ஆளும் பா.ஜனதா உள்பட அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை கவர்ந்து வருகிறார்கள். பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பா.ஜனதாவின் மேல்மட்ட தலைவர்கள் அடிக்கடி கர்நாடகம் வந்து செல்கிறார்கள். பிரதமர் மோடி இந்த மாதம் 2 முறை வந்து சென்றார்.

அமித்ஷாவும் ஒரு முறை பெங்களூரு, மண்டியாவுக்கு வருகை தந்தார். இந்த நிலையில் அவர் 2-வது முறையாக நேற்று கர்நாடகம் வந்துள்ளார். நேற்று மாலை உப்பள்ளிக்கு வந்த அவர் அங்கு தங்கினார். இன்று (சனிக்கிழமை) காலை பெலகாவிக்கு செல்லும் அமித்ஷா, அங்கு நடைபெறும் கே.எல்.இ. கல்லூரியின் பவள விழாவில் கலந்து கொள்கிறார். அதன் பிறகு தார்வாரில் நடைபெறும் தடயஅறிவியல் ஆய்வக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

ஜனசங்கல்ப யாத்திரை

குந்துகோலில் நடைபெறும் பா.ஜனதாவின் விஜய சங்கல்ப யாத்திரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பின்னர் குந்துகோல் வார்டு பகுதிகளுக்கு சென்று, சுவர் விளம்பர பணியை அவர் தொடங்கி வைக்கிறார். குந்துகோலில் 1½ கிலோ மீட்டர் தூரத்திற்கு மிகப்பெரிய அளவில் 'ரோடு ஷோ'வில் கலந்து கொள்கிறார். இதற்கு தேவையான ஏற்பாடுகளை பா.ஜனதா நிர்வாகிகள் செய்துள்ளனர்.

அதன் பிறகு பெலகாவி மாவட்டம் கித்தூரில் நடைபெறும் ஜனசங்கல்ப யாத்திரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டங்களில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள். வட கர்நாடகம் பா.ஜனதாவின் பலம் வாய்ந்த பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story