அமைச்சராக யார் இருக்கக்கூடாது என்பதை கவர்னர் எப்படி முடிவு செய்யலாம்? சட்ட நிபுணர் கேள்வி


அமைச்சராக யார் இருக்கக்கூடாது என்பதை கவர்னர் எப்படி முடிவு செய்யலாம்? சட்ட நிபுணர் கேள்வி
x
தினத்தந்தி 1 July 2023 4:15 AM IST (Updated: 1 July 2023 4:15 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சராக யார் இருக்கக்கூடாது என்பதை கவர்னர் எப்படி முடிவு செய்யலாம் என்று சட்ட நிபுணர் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி,

அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்குவதாக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் அறிவித்தார். அதற்கு எதிர்ப்புகள் எழுந்தநிலையில், அம்முடிவை நிறுத்தி வைப்பதாகவும், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில், இப்பிரச்சினை தொடர்பாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் முன்னாள் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி கூறியதாவது:-

ஒரு அமைச்சரை தன்னிச்சையாக நீக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை. அவர் தனது அதிகார வரம்பை மீறி இருக்கிறார். அமைச்சரவையில் யார் இருக்க வேண்டும், யார் இருக்கக்கூடாது என்று அவர் எப்படி முடிவு செய்ய முடியும்? அமைச்சரவையின் அறிவுரைப்படிதான் அவர் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூத்த வக்கீல் அஜித் சின்கா கூறியதாவது:-

கவர்னர் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது என்பது 1994-ம் ஆண்டில் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சட்ட அமர்வில் முடிவான விஷயம். ஒரு அமைச்சரை நீக்குமாறு அவர் யோசனை கூறலாம்.

ஆனால், அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் அவர் செயல்பட வேண்டும். ஒரு அமைச்சரை நீக்கும் முடிவு, கவர்னரின் பெயரில்தான் எடுக்கப்படும். இருப்பினும் அவர் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு மூத்த வக்கீல் கூறியதாவது:-

கடந்த 1974-ம் ஆண்டு, ஷாம்ஷெர் சிங் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு பிறகு கவர்னர் இதுபோன்ற விவகாரங்களில் சொந்தமாக செயல்பட முடியாது. ஜனாதிபதி, கவர்னர் ஆகியோரின் அதிகாரம் குறித்து ஷாம்ஷெர்சிங் வழக்கு வரையறுக்கிறது.

ஒரு அமைச்சரை நீக்க கவர்னருக்கு சுதந்திரமான அதிகாரம் கிடையாது. அப்படி அதிகாரம் இருந்தால், நாளை ஒட்டுமொத்த அரசையும் நீக்குவதாக அவர் சொல்லி விடுவார். பின்னர், கூட்டாட்சி முறையே சீர்குலைந்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story