பெங்களூருவில் கைதான 5 பயங்கரவாதிகளுக்கு, நசீருடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி?-போலீசார் தீவிர விசாரணை
பெங்களூருவில் கைதான 5 பயங்கரவாதிகளுக்கு, நசீருடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி? என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு:-
5 பயங்கரவாதிகள் கைது
பெங்களூரு ஆர்.டி.நகர் அருகே சுல்தான் பாளையாவில் பதுங்கி இருந்த 5 பயங்கரவாதிகளை கடந்த மாதம் (ஜூலை) 19-ந் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர். அவர்கள் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் 5 பேரும்லஸ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த நசீருடன் சேர்ந்து பெங்களூருவில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு இருந்தனர். இதையடுத்து, பயங்கரவாதி நசீரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். கைதான 5 பேர் மற்றும் நசீரை நேருக்கு நேராக அமர வைத்து போலீசார் விசாரித்து சில தகவல்களை பெற்றுள்ளனர். அதில் பயங்கரவாதி நசீருடன், 5 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டது எப்படி? என்ற தகவல்களும் கிடைத்துள்ளது.
பக்கத்து அறையில் அடைப்பு
அதாவது பெங்களூருவில் நடந்த ஒரு கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கும் பயங்கரவாதி ஜுனைத் மற்றும் தற்போது கைதாகி உள்ள 5 பேரும் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அப்போது ஜுனைத் உள்பட 6 பேரும், மற்றொரு கைதிகளுடன் தகராறு செய்துள்ளனர். இதன் காரணமாக அவர்கள் 6 பேரையும், பயங்கரவாதி நசீர் அடைக்கப்பட்டு இருந்த அறைக்கு அருகே உள்ள மற்றொரு அறையில் அடைத்துள்ளனர். தினமும் குளிக்க செல்லும் போதும், சாப்பிட செல்லும் போதும் ஒருவருக்கொருவர் பார்த்து பேச தொடங்கி உள்ளனர். இதையடுத்து நசீர், ஜுனைத் உள்பட 6 பேரையும் மூளை சலவை செய்து பயங்கரவாத அமைப்பில் சேர்த்து தெரியவந்தது. மேலும் பரப்பனஅக்ரஹாரா சிறையில் வைத்தே அவர்களுக்கு பயிற்சி அளித்ததும் தெரியவந்துள்ளது.