ஓய்வூதியம் கேட்டு போராடிய 2 பேர் தற்கொலை: பசவராஜ் பொம்மை கண் திறந்து பார்க்க இன்னும் எத்தனை பேர் உயிரிழக்க வேண்டும்? - சித்தராமையா கேள்வி


ஓய்வூதியம் கேட்டு போராடிய 2 பேர் தற்கொலை: பசவராஜ் பொம்மை கண் திறந்து பார்க்க இன்னும் எத்தனை பேர் உயிரிழக்க வேண்டும்? - சித்தராமையா கேள்வி
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வூதியம் கேட்டு போராடிய 2 ஆசிரியர்கள் தற்கொலை செய்துள்ளனர். பசவராஜ் பொம்மை கண் திறந்து பார்க்க இன்னும் எத்தனை பேர் உயிர் இழக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூரு:

எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

அரசு கோமாவில் இருப்பதை...

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி பெங்களூரு சுதந்திர பூங்காவில் 141 நாட்களாக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தங்களது கோரிக்கையை நிறைவேற்ற கோரி இதுவரை 2 ஆசிரியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பாகல்கோட்டையை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சித்தய்யா ஹிரேமட் போராட்டத்தின் போதே விஷம் குடித்து தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார். கடந்த 141 நாட்களாக நிரந்தரமாக இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அவர்களது கோரிக்கைகளை கேட்க கூட யாரும் இல்லை. ஆசிரியர்கள் கேட்பது ஓய்வூதியம். இது அவர்களது உரிமை ஆகும். அவர்களது கோரிக்கைகள் பற்றி அரசு காது கொடுத்து கேட்க கூடாதா?. ஓய்வூதியம் கேட்டு போராடி வரும் ஆசிரியர்களின் கோரிக்கையை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கண் திறந்து பார்க்க இன்னும் எத்தனை பேர் தங்களது உயிரை இழக்க வேண்டும். 141 நாட்கள் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டும், அதுபற்றி தங்களது கவனத்திற்கு வரவில்லை என்று அரசு கூறுவதன் மூலம், இத்தனை நாட்கள் இந்த அரசு கோமாவில் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளது.

நிவாரணம் வழங்க வேண்டும்

இந்த அரசுக்கும், ஆட்சியாளர்களின் காதுகளிலும் எப்போதும் கமிஷன் சத்தம் மட்டுமே கேட்கிறது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அவரே, ஏழைகளின் சத்தம் உங்கள் காதில் விழவில்லையா?. இன்னும் சில ஆசிரியர்கள் தங்களது உயிரை இழக்கும் முன்பாக, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தற்போது உயிரை பறி கொடுத்துள்ள 2 ஆசிரியர்களின் குடும்பத்திற்கும் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story