பசுமாட்டை வேட்டையாடி கொன்று இறைச்சியை தின்ற புலி; விவசாயி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்


பசுமாட்டை வேட்டையாடி கொன்று இறைச்சியை தின்ற புலி; விவசாயி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நிட்டூர் கிராமத்தில் பசுமாட்டை புலி வேட்டையாடி கொன்று இறைச்சியை தின்ற சம்பவம் நடந்துள்ளது. அந்த புலியிடம் இருந்து விவசாயி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

குடகு;

விவசாயி

குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுகா நிட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு. விவசாயியான இவர் கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் தனக்கு சொந்தமான பசுமாடுகள் மற்றும் ஆடுகளை கிராமத்தையொட்டிய வனப்பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். மேலும் அவரும் அங்குள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்து இருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் வனப்பகுதியில் இருந்து இரைதேடி வெளியேறிய ஒரு புலி அங்கு வந்துள்ளது. அந்த புலியைப் பார்த்த பசுமாடுகளும், ஆடுகளும் சிதறி ஓடின. இதனால் பதற்றம் அடைந்த ராஜு, பசுமாடுகளையும், ஆடுகளையும் பிடிக்க முயன்றார். அப்போது அவர் அங்கு புலி நின்று கொண்டிருப்பதைக் கண்டு பதறிப்போனார்.

தப்பி ஓட்டம்

இதையடுத்து அவர் அங்கிருந்து புலியின் கண்ணில் சிக்காமல் லாவகமாக தப்பி ஓடி கிராமத்திற்குள் புகுந்தார். பின்னர் அவர் நடந்த சம்பவம் குறித்து கிராம மக்களிடம் பதற்றத்துடன் தெரிவித்தார். அவர்கள் இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறை அதிகாரி கோபால் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அப்போது அங்கு ஒரு பசுமாட்டை புலி வேட்டையாடி பாதியளவு இறைச்சியை தின்றுவிட்டு சென்றிருந்தது வனத்துறையினருக்கு தெரியவந்தது. பின்னர் வனத்துறையினர் ராஜுவுக்கு ஆறுதல் கூறி, அவருக்கு அரசிடம் இருந்து நிவாரணம் பெற்றுத் தருவதாக உறுதி அளித்தார்.

வனத்துறையினர் நடவடிக்கை

மேலும் அந்த புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்காக அங்கு ஒரு இரும்பு கூண்டை வைத்த வனத்துறையினர், அதைச் சுற்றி கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்தி உள்ளனர். விரைவில் அந்த புலியை பிடித்து விடுவோம் என்று வனத்துறை அதிகாரி கோபால் தெரிவித்தார்.


Next Story