பெண் கொலையில் தற்கொலை நாடகமாடிய கணவர் கைது குடும்ப பிரச்சினையில் தீர்த்து கட்டினார்
பெங்களூருவில் பெண்ணை கொன்றுவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்ப பிரச்சினையில் தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.
பெங்களூரு:
தற்கொலை செய்திருப்பதாக...
பெங்களூரு பேகூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சவுடேஷ்வரி லே-அவுட்டில் வசித்து வருபவர் மனு, தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா(வயது 38). இவர், குடகு மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டையை சேர்ந்தவர் தான் மனு. இவர்கள் 2 பேரும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்பு சவுடேஷ்வரி லே-அவுட்டில் தம்பதி வசித்து வந்தனர்.
தனியார் நிறுவனத்தில் துப்புரவு தொழிலாளியாக சங்கீதா வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சங்கீதா தூக்கில் பிணமாக தொங்கினார். தனது மனைவி தற்கொலை செய்து கொண்டு இருப்பதாக பேகூர் போலீஸ் நிலையத்தில் மனு புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதே நேரத்தில் மனுவின் நடவடிக்கையிலும் சந்தேகம் ஏற்பட்டது.
கழுத்தை நெரித்து கொலை
இதையடுத்து, அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது தனது மனைவியை கொலை செய்ததை மனு ஒப்புக் கொண்டார். அதாவது கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதுபோல், 2 நாட்களுக்கு முன்பு சண்டை ஏற்பட்டுள்ளது. பின்னர் வீட்டில் படுத்து சங்கீதா தூங்கியுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் சங்கீதாவின் கழுத்தை நெரித்து மனு கொலை செய்திருக்கிறார்.பின்னர் சங்கீதாவின் உடலை அவர் தூக்கில் தொங்கவிட்டு விட்டு, தற்கொலை செய்திருப்பதாக நாடகமாடியது தெரியவந்துள்ளது. கைதான மனு மீது பேகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.