திருமணமான இளம்பெண் பாலியல் பலாத்காரம்: இன்ஸ்பெக்டரை டிஸ்மிஸ் செய்து போலீஸ் கமிஷனர் அதிரடி நடவடிக்கை!
ஐதராபாத் போலீஸ் கமிஷனர் சி.வி.ஆனந்த் பொறுப்பேற்றது முதல், தவறு செய்யும் போலீஸ் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்.
ஐதராபாத்,
ஐதராபாத் போலீஸ் கமிஷனர் சி.வி.ஆனந்த், சர்ச்சைக்குரிய சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கொரட்லா நாகேஸ்வர ராவை பணிநீக்கம் செய்து அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
இன்ஸ்பெக்டர் நாகேஸ்வர ராவ் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. திருமணமான இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவரது கணவரை அச்சுறுத்தியதாகவும் குற்றம் சாட்டி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனையடுத்து, அந்த போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், நாகேஸ்வர ராவ் மீது ஏற்கனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தெலுங்கானா போலீஸ் ஆட்சேர்ப்பு விதிகள் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தின் 311 (2)(பி) மற்றும் (3)க்கு உட்பட்ட அதிகாரத்துடன் எந்த விசாரணையும் இன்றி நாகேஸ்வர ராவ் பணியில் இருந்து நீக்கப்படுவதாக ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத் காவல்துறை ஆணையர் சி.வி.ஆனந்த் பொறுப்பேற்றது முதல், ஐதராபாத் நகர காவல்துறையில் தவறு செய்யும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்.இந்த நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை குறித்து ஐதராபாத் போலீஸ் கமிஷனர் சி.வி.ஆனந்த் கூறுகையில்,
கொரடலா நாகேஸ்வர ராவ் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து துறை ரீதியான விசாரணை நடத்துவது நடைமுறையில் சாத்தியமில்லை. விசாரணை நடத்தினால், சாட்சிகளையும், பாதிக்கப்பட்டவர்களையும் கொரட்லா நாகேஸ்வரராவ் மிரட்டும் வாய்ப்புகள் ஏராளம் உள்ளது.
அவரது குற்ற மனப்பான்மை பல வழக்குகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, துறை ரீதியான விசாரணைக்கு அதிக கால அவகாசம் எடுக்கும்.
இதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், இந்த சூழ்நிலையில் விசாரணை நடத்த இயலாது என்பதால், கொரட்லா நாகேஸ்வர ராவை பணியில் இருந்து நீக்குவதே சரியான தண்டனை என்று ஐதராபாத் போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.