தந்தை வழியில் நானும் தமிழர்களுக்கு
தந்தை வழியில் நானும் தமிழகர்களுக்கு துணையாக இருப்பேன் என்று ராகவேந்திரா எம்.பி. தெரிவித்துள்ளார்.
சிவமொக்கா:-
பொன் விழா நிகழ்ச்சி
சிவமொக்கா மாவட்டத்தில் வசித்து வரும் தமிழர்கள் ஒன்றிணைந்து விருந்தினர் மாளிகை ஒன்றை கட்டினர். இந்த கட்டிடம் கட்டப்பட்டு 50 ஆண்டாகியுள்ளது. இதனால் அந்த கட்டிடத்திற்கு பொன் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் துணை முதல்-மந்திரி ஈசுவரப்பா, ராகவேந்திரா எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ராகவேந்திரா எம்.பி. பேசும்போது கூறியதாவது:-
துணையாக இருப்பேன்
கர்நாடக தமிழர்கள் மீது எனது தந்தை எடியூரப்பா மிகவும் அன்பு வைத்துள்ளார். அதற்கு அடையாளம் 18 ஆண்டுகளாக மூடி வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையை திறந்ததுதான். சிவமொக்காவில் தமிழர்கள் பயன்படுத்தும் வகையில் சமுதாய நலக்கூடங்கள் கட்டுவதற்காக ரூ.50 ஆயிரம் மானியம் பெற்று தந்தார். தந்தையின் வழியில் நானும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறேன். என்றும் தமிழர்களுக்கு துணையாக இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதை தொடர்ந்து முன்னாள் துணை முதல்-மந்திரி ஈசுவரப்பா பேசும்போது கூறியதாவது:- பா.ஜனதா கட்சி எப்போதும் தமிழர்களுக்கு உறுதுணையாக இருக்கும். தமிழர்களின் உழைப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். உழைப்பால் உர்ந்தவர்கள் தமிழர்கள். இன்று உயர் மட்டத்தில் அவர்கள் இருப்பதற்கு உழைப்பு ஒரு காரணம். தொடர்ந்து அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.