எனக்கு பிரதமராகும் விருப்பமோ, நோக்கமோ இல்லை; டெல்லியில் நிதிஷ் குமார் பேட்டி
எனக்கு பிரதமராகும் விருப்பமோ மற்றும் நோக்கமோ இல்லை என பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் டெல்லியில் இன்று கூறியுள்ளார்.
புதுடெல்லி,
பீகாரில் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதாதளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக நிதிஷ் குமார் இருந்து வருகிறார். பா.ஜ.க.வுடனான கூட்டணி முறிவுக்கு பின்பு, வருகிற பொது தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
அவரது கட்சியை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் மணிப்பூரில் கடந்த வெள்ளி கிழமை பா.ஜ.க.வில் இணைந்தனர். பா.ஜ.க. குதிரை பேரத்தில் ஈடுபட்டு, பணபலத்தினால் எம்.எல்.ஏ.க்களை இழுக்கிறது என கட்சி தலைவர் ராஜீவ் ரஞ்சன் குற்றச்சாட்டாக கூறினார். இதனை தொடர்ந்து, பா.ஜ.க.வுக்கும், ஐக்கிய ஜனதா தள கட்சிக்கும் இடையே வார்த்தை போர் நீடித்தது.
ரஞ்சன் கூறும்போது, எங்களை தடுத்து நிறுத்த எவ்வளவு போராடினாலும் கவலையில்லை. 2023-ம் ஆண்டில் நாங்கள் தேசிய கட்சியாக உருவெடுப்போம் என அவர் கூறினார்.
நிதிஷ் குமார் தனது வாழ்வில் ஒரு போதும் பிரதமராக முடியாது. அவரால் பிரதமர் வேட்பாளராக கூட முடியாது என்று பா.ஜ.க. நாடாளுமன்ற மேலவை எம்.பி. மற்றும் பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியான சுஷில் குமார் மோடி கூறினார்.
இந்த சூழலில், நிதிஷ் குமார் இன்று டெல்லி சென்றுள்ளார். இந்த டெல்லி பயணத்தின்போது, ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலரையும் சந்திக்க உள்ளார். 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் இதில் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் மற்றும் இடதுசாரி தலைவர்களையும் நிதிஷ் குமார் சந்திக்க உள்ளதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கட்சி வட்டார தகவல்கள் கூறுகின்றன. பீகாரில் பா.ஜ.க. உடனான கூட்டணியை முறித்து கொண்ட பின்புநிதிஷ் குமார் டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.
பீகாரின் பாட்னா நகரில் சமீபத்தில் நடந்த ஐக்கிய ஜனதா தள செயற்குழு கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைவதற்காக நிதிஷ் குமார் பணியாற்றுவதற்கு அங்கீகாரம் வழங்குவது மற்றும் பா.ஜ.க. ஆட்சியின் கீழ் நாட்டில் அறிவிக்கப்படாத அவசரகாலம் நீடிக்கிறது என்ற இரு தீர்மானங்கள் நிறைவேறின.
இந்நிலையில், அவரது டெல்லி பயணம் மற்றும் தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுவது மற்றும் அவரது கட்சியை தேசிய கட்சியாக மாற்றும் திட்டம், பிரதமர் வேட்பாளர் திட்டம் ஆகியவை அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளன.
இதுபற்றி டெல்லியில் நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து விட்டால், பின்னர் ஒரு நல்ல சூழல் உருவாக்கப்படும். எனக்கு பிரதமராகும் ஆசையோ மற்றும் நோக்கமோ கிடையாது என அவர் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவுடனான சந்திப்பின்போது, பத்திரிகையாளர் ஒருவர் பிரதமர் வேட்பாளர் பற்றி தொடர்ச்சியாக கேள்வி எழுப்பியதில் நிதிஷ் குமார் கோபம் கொண்டார்.
அவர் எழுந்து நின்று, கைகளால் சைகை காட்டியபடி உடனே இங்கிருந்து கிளம்புவோம் என கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். அதன்பின்பு, சந்திரசேகர் ராவ் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து நிருபருக்கு பதில் கூறினார். நிதிஷ் குமாரையும் சமரசப்படுத்தி அமரும்படி கூறினார்.