முரட்டுத்தனமானவர் என்று நினைத்தேன்; மோடி மனிதாபிமானம் மிக்கவர் - குலாம்நபி ஆசாத்
முரட்டுத்தனமானவர் என்று நினைத்தேன் ஆனால் மோடி மனிதாபிமானம் மிக்கவர் என்று குலாம்நபி ஆசாத் தெரிவித்தார்.
புதுடெல்லி,
காங்கிரசில் இருந்து விலகிய குலாம்நபி ஆசாத் தனது பேட்டியில் பிரதமர் மோடி பற்றி கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி குழந்தைகளோ, சொந்த குடும்பமோ இல்லாதவர். அதனால் அவரை முரட்டுத்தனமானவர் என்று கருதினேன். ஆனால் அவர் மனிதாபிமானத்தை காட்டினார்.
கடந்த 2007-ம் ஆண்டு நான் காஷ்மீர் மாநில முதல்-மந்திரியாக இருந்தபோது, காஷ்மீருக்கு சுற்றுலா வந்த குஜராத் பயணிகளின் பஸ் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்கினர். இதில் சிலர் பலியானார்கள்.
அப்போது குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்த நரேந்திர மோடி, என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவரது குரலை கேட்டவுடன் நான் சத்தமாக அழுதேன். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டி இருப்பதால், இப்போது என்னால் பேச முடியாது என்று என் உதவியாளர் அவரிடம் தெரிவித்தார். பின்னர், பலியானோர் உடல்களையும், காயம் அடைந்தவர்களையும் கொண்டு செல்ல 2 விமானங்கள் அனுப்பிவைக்குமாறு மோடியை தொடர்பு கொண்டு கேட்டேன். அப்போதும் நான் அழுதேன். இதைப்பற்றி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், மாநிலங்களவையில் நடந்த எனக்கான பிரிவு உபசார விழாவில் பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார். காஷ்மீர் பற்றி பேசும்போது அவர் உணர்ச்சிவசப்பட்டார். நானும் கண்ணீர் வடித்தேன்.
அவரது பேச்சை அறியாமை கொண்ட காங்கிரசார் திரித்து கூறினர். அவர் உணர்ச்சிவசப்பட்டது எனக்காக அல்ல. அந்த துயர சம்பவத்துக்காக. மேலும், சபையில் மோடியை கட்டிப்பிடித்தது ராகுல்காந்தி தான், நான் அல்ல என்று அவர் கூறினார்.