ஒற்றுமை பாதயாத்திரை மூலம் ராகுல் காந்தி கராச்சிக்கு செல்வார் என நினைத்தேன்; ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கிண்டல்


ஒற்றுமை பாதயாத்திரை மூலம் ராகுல் காந்தி கராச்சிக்கு செல்வார் என நினைத்தேன்; ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கிண்டல்
x

ராகுல் காந்தி ஒற்றுமை பாதயாத்திரை மூலம் கராச்சிக்கு செல்வார் என்று நினைத்தேன் என ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கூறினார்.

பெங்களூரு:

ராகுல் காந்தி

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா சார்பில் 4 விஜய சங்கல்ப யாத்திரை நடத்தப்படுகிறது. அதன் முதல் யாத்திரையை நேற்று முன்தினம் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சாம்ராஜ்நகரில் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து 2-வது யாத்திரை தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் பெலகாவி மாவட்டம் நந்தகடாவில் நேற்று நடைபெற்றது. இதில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு யாத்திரையை தொடங்கி வைத்து பேசியதாவது:-

காங்கிரசின் இளம் தலைவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா?. இப்போது தான் அவரை ஒற்றுமை பாதயாத்திரை மூலம் அரசியலுக்கு அழைத்து வந்துள்ளனர். 1947-ம் ஆண்டு இந்தியா பிளவுபடுத்தப்பட்டது. அதனால் ராகுல் காந்தி ஒற்றுமை பாதயாத்திரை மூலம் கராச்சிக்கோ அல்லது லாகூருக்கோ செல்வார் என்று நான் நினைத்தேன். ஆனால் அவர் அங்கு செல்லவில்லை.

மோடிக்கு சவக்குழி

இந்தியா ஒற்றுமையாக இருக்கும்போது, எங்களை ஒன்றுபடுத்த இந்த ராகுல் காந்தி யார்?. மக்களை முட்டாளாக்கி ஒருவர் நீண்ட காலத்திற்கு அரசியல் செய்ய முடியாது. நம்பிக்கையுடன், மக்களிடம் நேரடி தொடர்பில் இருப்பவர்கள் மட்டுமே அரசியலில் வெற்றி பெற முடியும். பா.ஜனதாவில் உள்ளவர்களால் மட்டுமே இதை செய்ய முடியும்.

பிரதமர் மோடிக்கு சவக்குழி தோண்டுவதாக காங்கிரசார் முழக்கமிடுகிறார்கள். பா.ஜனதா, மோடிக்கு எதிராக காங்கிரசார் எந்த அளவுக்கு குழி தோண்டுகிறார்களோ, அந்த அளவுக்கு தாமரை மலர்ந்து கொண்டே இருக்கும். ராணுவ வீரர்களின் செயலை கண்டு நாங்கள் பெருமைப்படுகிறோம். எங்களை விட நீங்கள்(காங்கிரசார்) தான் அதிகமாக பெருமைப்பட வேண்டும். நமது வீரர்கள் துணிச்சலுடன் செயல்படுகிறார்கள்.

பா.ஜனதாவுக்கு நல்ல நாள்

திரிபுரா உள்பட 3 மாநிலங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. அதனால் இந்த நாள் பா.ஜனதாவுக்கு நல்ல நாள் ஆகும். திரிபுரா, நாகாலாந்தில் பா.ஜனதா சொந்த பலத்தில் ஆட்சி அமைக்கிறது. மேகாலயாவில் பா.ஜனதாவின் பலம் அதிகரித்துள்ளது. அதனால் கர்நாடக மக்கள் மீண்டும் பா.ஜனதாைவை ஆட்சியில் அமர்த்த உறுதி ஏற்க வேண்டும். புதிய கர்நாடகத்தை உருவாக்க மூன்றில் 2 பங்கு தொகுதிகளில் பா.ஜனதாவை நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும்.

இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.

முன்னதாக அவர் சங்கொள்ளி ராயண்ணாவின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். உள்துறை மந்திரி அமித்ஷா இன்று (வெள்ளிக்கிழமை) பா.ஜனதாவின் 3-வது யாத்திரையை பீதரிலும், 4-வது விஜய சங்கல்ப யாத்திரையை தேவனஹள்ளியிலும் தொடங்கி வைக்கிறார்.


Next Story