அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகிறேன்; டி.கே.சிவக்குமார் பேட்டி


அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகிறேன்; டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 7 Oct 2022 12:15 AM IST (Updated: 7 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நேரில் ஆஜராகிறேன் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தொண்டர்களுக்கு ஊக்கம்

சோனியா காந்தி நமது மாநிலத்திற்கு வந்து சிறிய கிராமத்தில் பூஜை செய்து வழிபட்டார். அத்துடன் ராகுல் காந்தியின் ஒற்றுமை மாநாட்டிலும் கலந்து கொண்டுவிட்டு சென்றுள்ளார். அவருக்கு கர்நாடக மக்கள் சார்பில் நன்றி தொிவித்து கொள்கிறேன். காங்கிரஸ் கடினமான நேரத்தில் இருக்கும் நிலையில் அவர் கர்நாடகத்திற்கு வந்து சென்றது தொண்டர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது.

ராகுல் காந்தி தனது பாதயாத்திரையின்போது அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிகிறார். கர்நாடக அரசு பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து விரைந்து முடிவு எடுக்க வேண்டும். நாடாளுமன்ற கூட்டம் தொடங்கும் வரை காத்திருக்காமல் இந்த விஷயத்தில் அரசு துரிதமாக செயல்பட வேண்டும்.

நேரில் ஆஜராகிறேன்

எனது மீதான வழக்கு மட்டுமின்றி வேறு வழக்குகள் தொடர்பாக விசாரிக்க 7-ந் தேதி நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை நோட்டீசு அனுப்பியுள்ளது. நேரில் ஆஜராக காலஅவகாசம் வழங்குமாறு கேட்டோம். காலஅவகாசம் வழங்க மறுத்துவிட்டது. அதனால் நாளை (இன்று) காலை 10.30 மணிக்கு டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகிறேன்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story