ரூ.5 லட்சம் லஞ்ச வழக்கு: ஐ.ஏ.எஸ். அதிகாரி மஞ்சுநாத் திடீர் கைது
ரூ.5 லட்சம் லஞ்ச வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மஞ்சுநாத்தை, ஊழல் தடுப்பு படையினர் கைது செய்து உள்ளனர்.
பெங்களூரு: ரூ.5 லட்சம் லஞ்ச வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மஞ்சுநாத்தை, ஊழல் தடுப்பு படையினர் கைது செய்து உள்ளனர்.
ரூ.5 லட்சம் லஞ்சம்
பெங்களூரு பேகூரை சேர்ந்தவர் அஜம்கான். இவருக்கும், ஒருவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலப்பிரச்சினையை தீர்த்து வைக்க கலெக்டர் அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வந்த மகேஷ், ஊழியர் சந்துரு ஆகியோர் ரூ.15 லட்சம் லஞ்சம் கேட்டு உள்ளனர். முதலில் லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்ட அஜம்கான், பின்னர் மகேஷ், சந்துரு மீது ஊழல் தடுப்பு படையில் புகார் அளித்து இருந்தார்.
இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து ரூ.5 லட்சம் லஞ்சத்தை வாங்கிய போது மகேஷ், சந்துருவை ஊழல் தடுப்பு படையினர் கைது செய்து இருந்தனர். இந்த நிலையில் நிலப்பிரச்சினையை தீர்க்க பெங்களூரு கலெக்டர் மஞ்சுநாத் தன்னிடம் லஞ்சம் கேட்டதாக அஜம்கான் கூறி இருந்தார். இதையடுத்து மஞ்சுநாத் மீதும் ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.
பணி இடமாற்றம்
ஆனால் தன் மீது ஊழல் தடுப்பு படையினர் பதிவு செய்ய வழக்கை ரத்து செய்ய கோரியும், விசாரணைக்கு தடை கேட்டும் கர்நாடக ஐகோர்ட்டில் மஞ்சுநாத் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. மேலும் ஊழல் தடுப்பு படை போலீசாரின் செயல்பாடுகளை கோர்ட்டு கடுமையாக விமர்சித்தது. ஊழல் தடுப்பு படை, ஊழலின் மையம் என்று கோர்ட்டு கூறியது.
இதற்கிடையே பெங்களூரு நகர கலெக்டராக இருந்த மஞ்சுநாத்தை அரசு பணி இடமாற்றம் செய்தது. அவர் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட இயக்குனராக மாற்றப்பட்டு இருந்தார். இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டு தங்களது செயல்பாட்டை கண்டித்ததால் ஊழல் தடுப்பு படையினர் மஞ்சுநாத் மீதான விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது ரூ.5 லட்சம் லஞ்ச வழக்கில் மஞ்சுநாத்துக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
கைது
மேலும் இந்த வழக்கின் விசாரணைக்காக மஞ்சுநாத், ஊழல் தடுப்பு படை போலீசார் முன்பு ஆஜராகி இருந்தார். இந்த நிலையில் நேற்றும் இந்த வழக்கின் விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் நடந்தது. அப்போது நீதிபதிகள் ஊழல் தடுப்பு படையை மீண்டும் கடுமையாக விமர்சித்தனர். நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம். தவறு செய்த அதிகாரி மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் நேற்று மதியம் பெங்களூரு யஷ்வந்தபுரத்தில் உள்ள வீட்டில் இருந்த மஞ்சுநாத்தை ஊழல் தடுப்பு படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரை ஊழல் தடுப்பு படை சிறப்பு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்திவிட்டு தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் மஞ்சுநாத்தை 3-வது குற்றவாளியாக போலீசார் சேர்த்து உள்ளனர். லஞ்ச வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.