ஐ.ஏ.எஸ். அதிகாரியின் ஜாமீன் மனு மீதான விசாரணைக்கு தடை; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


ஐ.ஏ.எஸ். அதிகாரியின் ஜாமீன் மனு மீதான விசாரணைக்கு தடை; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜாமீன் மனு மீது விசாரணை நடத்த ஐகோர்ட்டுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

கடந்த கால பின்னணி

பெங்களூரு நகர மாவட்ட கலெக்டராக இருந்தவர் மஞ்சுநாத். நில விவகாரம் தொடர்பாக அவர் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஊழல் தடுப்பு படையின் (ஏ.சி.பி.) செயல்பாடுகைளை குறிப்பாக அதன் கூடுதல் டி.ஜி.பி. சீமந்த்குமார் சிங் குறித்து ஐகோர்ட்டு நீதிபதி சந்தேஷ் கடும் அதிருப்தி தெரிவித்ததை அடுத்து ஊழல் தடுப்பு படையினர் மஞ்சுநாத்தை கைது செய்தனர். லஞ்ச வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரே கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து கைது செய்யப்பட்ட மஞ்சுநாத் சார்பில் ஜாமீன் வழங்க கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது நீதிபதி சந்தேஷ் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விசாரணையின்போது, தன்னை பணி இடமாற்றம் செய்து விடுவதாக மிரட்டல் வந்ததாக அவர் பரபரப்பு புகார் கூறினார். இந்த நிலையில் அந்த மனு மீது நேற்று முன்தினம் ஐகோர்ட்டில் நீதிபதி சந்தேஷ் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.அப்போது அவர், ஊழல் தடுப்படை அதிகாரிகளை நியமிக்கும்போது ஊழல் கறை படியாதவர்களை நியமிக்க வேண்டும் என்றும், அவர்களின் கடந்த கால பின்னணிகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அரசுக்கு அறிவுரை கூறினார். தனக்கு வந்த அச்சுறுத்தல் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் கூறி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

3 நாட்களுக்கு ஒத்திவைப்பு

இந்த நிலையில் ஏ.சி.பி. கூடுதல் டி.ஜி.பி. சீமந்த்குமார் சிங் குறித்து நீதிபதி கூறிய கருத்துகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நேற்று தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனு குறித்த விசாரணையை 3 நாட்களுக்கு ஒத்தி வைக்கும்படி கூறி தடை விதித்து கர்நாடக ஐகோர்ட்டுக்கு உத்தரவிட்டனர். ஐகோர்ட்டில் அந்த மனு மீதான விசாரணை இன்றைக்கு (புதன்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் ஐகோர்ட்டில் அந்த மனு மீது இன்று விசாரணை நடைபெறாது.

நேற்று முன்தினம் நடைபெற்ற விசாரணையின்போது நீதிபதி சந்தேஷ் பேசுகையில், "ஊழல் தடுப்பு படை கூடுதல் டி.ஜி.பி. என்னை பணி இடமாற்றம் செய்வதாக வேறு ஒரு சக நீதிபதி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். ஊழலை ஒழிப்பது தான் ஊழல் தடுப்பு படையின் வேலை. ஆனால் பெரிய திமிங்கலங்களை விட்டுவிட்டு கடை நிலையில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஊழல் தடுப்பு படையில் பணியாற்றுபவர்களே பெரிய ஊழல்வாதிகள். நான் அரசியல் சாசனத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டவன். அதை விடுத்து நான் வேறு எந்த கொள்கையையும் சாராதவன். என்னை இடமாற்றம் செய்தாலும் பயப்பட மாட்டேன். நான் நீதிபதி பணிக்கு வந்த பிறகு புதிதாக சொத்து சேர்க்கவில்லை. நீதிபதி பணி இல்லாவிட்டால் சொந்த ஊருக்கு போய் விவசாயம் செய்வேன்" என்று கூறி தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.


Next Story