இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்- பிரியங்கா காந்தி
பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ்பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்று பேசினார்.
சிம்லா,
இமாச்சல் பிரதேச சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சோலான் பகுதியில் உள்ள தோடோ மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ்பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:
இமாச்சலப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்குவது குறித்து ஒப்புதல் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவோம். மாநிலத்தை ஆளும் பாஜக அரசு ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு பணத்தை வழங்குவது இல்லை. பெரும் தொழில் அதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதற்கே பாஜக முன்னுரிமை அளிக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக அரசுப் பதவிகள் காலியாக உள்ளன. இளைஞர்கள், அரசு ஊழியர்கள், பெண்கள் பற்றி அவர்கள் சிந்திப்பது இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.