டிரைவர்கள் வாகனங்களில் போதைப்பொருட்களை கடத்தினால் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை வேண்டியதில்லை- கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு
டிரைவர்கள் வாகனங்களில் போதைப்பொருட்களை கடத்தினால் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை வேண்டியதில்லை என்று கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
பெங்களூரு: பெங்களூருவில், டெல்லியை சேர்ந்த ஒரு டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான லாரியில் டிரைவர் போதைப்பொருட்களை கடத்தியதால் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்தார். லாரியில் டிரைவர் இருக்கைக்கு பின்னால் வைத்து போதைப்பொருளை டிரைவர் கடத்தி சென்றிருந்தார். இது கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்திருந்தது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்தை சேர்ந்த உரிமையாளர்களான காஷ்மீரை சேர்ந்த விஜய் கொஜ்ஜார் (வயது 72), சுனில்குமார் கவுசிக் (40) மற்றும் டிரைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. தங்கள் மீது பதிவான வழக்கை ரத்து செய்யப்படும் கூறி டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர்கள், கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்கள்.
அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையில் நடைபெற்று வந்தது.அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், உரிமையாளருக்கு தெரியாமலேயே டிரைவர் தான் போதைப்பொருட்களை கடத்தி சென்றிருந்தார். அப்படி இருக்கையில் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது தேவையற்றது. இந்த போதைப்பொருட்கள் கடத்தலுக்கும், உரிமையாளர்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லாததால், அவர்கள் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய வேண்டும், என்றார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விஜய் கொஜ்ஜார், சுனில்குமார் கவுசிக் மீது பதிவான வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் நீதிபதி கூறுகையில், டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்திலேயோ அல்லது பிற வாகனங்களின் உரிமையாளர்களுக்கோ தெரியாமல் டிரைவர்கள் போதைப்பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டால், அதற்காக வாகனங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை வேண்டியதில்லை என்றார்.