மத்திய அரசின் அவசர சட்டம் பிற மாநிலங்களுக்கும் வந்து விடும்- அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு
மத்திய அரசின் அவசர சட்டத்தை எதிர்க்காவிட்டால், அது பிற மாநிலங்களுக்கும் வந்து விடும் என்று டெல்லி பொதுக்கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
புதுடெல்லி,
டெல்லியில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பான வழக்கில், அதிகாரிகளை நியமனம் மற்றும் இடமாற்றம் செய்யும் அதிகாரம், மாநில அரசுக்குத்தான் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. ஆனால், அதை நீர்த்துப்போக செய்யும் வகையில், அந்த அதிகாரத்தை பறிப்பதற்கான ஒரு அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில், இதற்கான மசோதாவை நிறைவேற்றி சட்டமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனவே, நாடாளுமன்றத்தில் அம்மசோதாவை ஆதரிக்க வேண்டாம் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி, டெல்லி ராமலீலா மைதானத்தில் ஆம் ஆத்மி கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. அதில், பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் மான், சுயேச்சை எம்.பி. கபில்சிபல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிலம், போலீஸ், பொது ஒழுங்கு தவிர டெல்லியில் மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதை சுப்ரீம் கோர்ட்டும் தெரிவித்துள்ளது. ஆனால், அதை நிராகரித்து மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இது டெல்லி மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்க மாட்டேன் என்று பிரதமர் மோடி சொல்வது ஹிட்லரின் சர்வாதிகாரம். இப்போது, மக்கள் உயர்ந்தவர்கள் அல்ல, கவர்னர்தான் உயர்ந்தவர் என்று ஆகிவிட்டது.இந்த அவசர சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் சென்று எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்தேன். நாம் தனியாக இல்லை. 140 கோடி மக்களும் நமக்கு ஆதரவாக உள்ளனர். ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தையும் பாதுகாக்க இச்சட்டத்தை எதிர்ப்போம். மாநிலங்களவையில் தோற்கடிப்போம். இப்போராட்டம் வெற்றி பெறும்.அவசர சட்டம் மூலம் பிரதமர் மோடியின் முதல் தாக்குதல் டெல்லியில் நடந்துள்ளது. இதை எதிர்க்காவிட்டால், ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற பிற மாநிலங்களிலும் இத்தகைய அவசர சட்டத்தை கொண்டுவந்து விடுவார்கள்.
பிரதமர் மோடி குஜராத்திலும், மத்தியிலுமாக 21 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கிறார். நான் 8 ஆண்டுகளாக டெல்லியில் முதல்-மந்திரியாக இருக்கிறேன். எங்களில் யார் மக்களுக்கு அதிகமான பணிகளை செய்துள்ளார்கள் என்று பார்ப்போமா?முழு அதிகாரம் இருந்தும் பிரதமர் எதுவுமே செய்யவில்லை. ஆனால், பல்வேறு முட்டுக்கட்டைகளை மீறி நான் நிறைய செய்துள்ளேன். எங்கள் பணிகளை தடுக்கவே அவசர சட்டம் கொண்டு வந்துள்ளனர்.மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோரை சிறையில் அடைத்துள்ளனர். எங்களிடம் ஆயிரம் சிசோடியாக்களும், ஜெயின்களும் உள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.