சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டால் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்


சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டால் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
x

கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:-

சித்தராமையா ஆலோசனை

பெங்களூரு விதானசவுதாவில் நேற்று உயர் போலீஸ் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி சித்தராமையா ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், மந்திரிகள் எம்.பி.பட்டீல், கே.ஜே.ஜார்ஜ், ஜமீர் அகமதுகான், சதீஸ் ஜார்கிகோளி, கே.எச். முனியப்பா மற்றும் கூடுதல் தலைமை செயலாளர் ரஜனீஷ் கோயல் இருந்தார்கள்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-

சைபர் குற்றங்களை தடுக்க...

மக்கள் மாற்றத்தை விரும்பி சட்டசபை தேர்தலில் காங்கிரசை வெற்றி பெற செய்துள்ளனர். மக்களின் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காணும் விதமாக போலீசார் பணியாற்ற வேண்டும். பெங்களூரு நகரில் போக்குகவரத்து நெரிசல் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. அதுபற்றிய தனியாக ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும். என்றாலும், போக்குவரத்து நெரிசல் பிரச்சினை, சைபர் குற்றங்களை தடுப்பதில் முன்னுரிமை அளித்து போலீசார் பணியாற்ற வேண்டும்.

குறிப்பாக சமூக வலைதளங்களில் சட்டம்-ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாகவும், மக்களின் அமைதியை கெடுக்கும் விதமாகவும் ஏதேனும் பதிவுகள் வெளியிடுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை போலீசார் தீவிரமாக கண்காணிப்பதும் அவசியமாகும். போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்படுத்துவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதை கட்டுப்படுத்த வேண்டும்.

அதிகாரிகள் மீது நடவடிக்கை

போலீஸ் நிலையங்களுக்கு, உயர் போலீஸ் அதிகாரிகள் அடிக்கடி சென்று, அங்கு என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்க வேண்டும். போலீஸ் நிலையங்களுக்கு புகார் அளிக்க வருபவர்களை அலைகழிப்பது, அவர்களையே ஒரு குற்றவாளிகள் போல் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். புகார் அளிக்க வருபவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை முதலில் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு போலீஸ் நிலையங்களுக்கும் உட்பட்ட பகுதிகளில் நடக்கும் சட்டவிரோத செயல்களை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சூதாட்ட விடுதிகள் திறந்திருப்பது, போதை விருந்து நடத்துவது இதுபோன்ற சட்டவிரோத சம்பவங்கள் நடைபெறுவதை சகித்து கொள்ள முடியாது. இதற்கு அனுமதி அளிக்கும் போலீஸ் அதிகாரிகள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். சிறப்பாக செயல்படும் போலீசாருக்கு, பாராட்டுகள் தெரிவிக்கப்படும். அலட்சியமாக பணியாற்றிவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் எந்த விதமான பாரபட்சம் காட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story