மழை வெள்ளத்தால் ரூ.250 கோடி இழப்பு: பிரச்சினையை தீர்க்காவிட்டால் வேறு இடத்திற்கு மாறுவோம் என கர்நாடக அரசுக்கு, ஐ.டி. நிறுவனங்கள் எச்சரிக்கை
பெங்களூருவில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பிரச்சினையை தீர்க்காவிட்டால் வேறு இடத்திற்கு நிறுவனங்களை மாற்றுவோம் என்று கர்நாடக அரசுக்கு ஐ.டி. நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
பெங்களூரு: பெங்களூருவில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பிரச்சினையை தீர்க்காவிட்டால் வேறு இடத்திற்கு நிறுவனங்களை மாற்றுவோம் என்று கர்நாடக அரசுக்கு ஐ.டி. நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.பெங்களூருவில் மழை பாதிப்பு குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு மென்பொருள் உற்பத்தி (ஐ.டி.) நிறுவனங்கள் ஒரு கடிதம் எழுதியுள்ளன. அதில் கூறியிருப்பதாவது:-
ரூ.250 கோடி இழப்பு
பெங்களூருவில் கடந்த 30-ந் தேதி இரவு கனமழை பெய்தது. இதனால் பெங்களூரு புறவழிச்சாலையில் அதிக மழைநீர் சூழ்ந்து வெள்ளம் ஏற்பட்டது. இதனால் எங்கள் நிறுவனங்களில் நீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரூ.250 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. சாலைகள் ஏரியை போல் மாறிவிட்டன. அதனால் எங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்கு வர முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.
பெங்களூருவில் இருந்து அரசுக்கு கிடைக்கும் வருவாயில் 32 சதவீதம் மென்பொருள் நிறுவனங்களை சேர்ந்தது. சில்க் போர்டில் இருந்து கே.ஆர்.புரம் வரை உள்ள 17 கிலோ மீட்டர் சாலையில் நூற்றுக்கணக்கான சர்வதேச மென்பொருள் நிறுவனங்கள் உள்ளன. புறவழிச்சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் எங்கள் நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தீர்ப்பதாக உறுதியளித்தார்
இந்த சாலையின் மோசமான நிலை குறித்து கடந்த 2019-ம் ஆண்டு அப்போது இருந்த முதல்-மந்திரியிடம் நாங்கள் கோரிக்கை கடிதம் கொடுத்தோம். பிரச்சினையை தீர்ப்பதாக உறுதியளித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போதும் காலம் மிஞ்சிவிடவில்லை. உடனடியாக அந்த சாலையை சீரமைக்காவிட்டால் நாங்கள் பெங்களூருவில் இருந்து நிறுவனங்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்படும்.
இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.