ஜனநாயகத்தில் ஒருவரை கடவுள் ஆக்கினால், அது சர்வாதிகாரம்; காங்கிஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு


ஜனநாயகத்தில் ஒருவரை கடவுள் ஆக்கினால், அது சர்வாதிகாரம்; காங்கிஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு
x

ஜனநாயகத்தில் ஒருவரை கடவுளாக்கினால், அது ஜனநாயகம் இல்லை என்றும், அது சர்வாதிகாரம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெங்களூரு:

எஸ்.சி., எஸ்.டி. மாநாடு

கர்நாடக சட்டசபைக்கும் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வியூகங்களை அமைத்து வருகிறது. சட்டசபை தேர்தலையொட்டி சித்ரதுர்கா மாவட்டத்தில் நேற்று எஸ்.சி. மற்றும் எஸ்.டி. சமுதாயங்களின் மாநாட்டுக்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்தது.

இந்த மாநாட்டை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடங்கி வைத்து பேசியதாவது:-

அது சர்வாதிகாரம்

கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலை நாம் ஒற்றுமையாக இருந்து எதிர் கொண்டால், காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது. மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறி இருந்தார். இதுவரை 14 கோடி பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். தற்போது நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு விஷயத்திற்கும் பிரதமர் மோடி, ஜனநாயகத்தில் ஒருவரை கடவுளாக்கினால், அது ஜனநாயகம் இல்லை. அது சர்வாதிகாரம் ஆகும். சர்வாதிகாரத்திற்கு வழி வகுத்து விடும் என்பதை யோசித்து பார்க்க வேண்டும். உங்கள் உரிமைகளை அறிந்து பெறுவதற்கு போராட வேண்டும். நாட்டில் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க அனைத்து சமூகத்தினரும் ஒன்றுபட வேண்டும். குறிப்பாக எஸ்.சி. மற்றும் எஸ்.டி. சமூகத்தினர் ஒன்று பட வேண்டும்.

30 லட்சம் இடங்கள் காலி

நீங்கள் வலிமையாகவும், ஒற்றுமையாகவும் இருந்தால் மட்டுமே சமுதாயத்தில் மதிப்பு இருக்கும். ஒற்றுமையாக இல்லாவிட்டால், ஆங்கிலேயர்கள் ஆட்சியில் பயன்படுத்திய பிரித்தாளும் கொள்கையை தற்போது பிரதமர் மோடியும் கையில் எடுத்துள்ளார். இதனை ஒவ்வொருவரும் மனதில் வைத்து கொள்ள வேண்டும். நாட்டில் ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் பாதுகாப்பது தாம் நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். அரசியல் அமைப்பும், ஜனநாயகமும் இருந்தால் தான் இடஒதுக்கீடு மூலமாக பதவி உயர்வு, எம்.எல்.ஏ., மந்திரியாக முடியும.

அரசு துறையில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பணி இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை ஏன் பிரதமர் மோடி நிரப்பவில்லை. அந்த 30 லட்சம் பணி இடங்களில், 15 லட்சம் பணி இடங்கள் எஸ்.சி, எஸ்.டி. சமுதாயத்திற்கு சேர்ந்தது. எதற்காக இந்த பணி இடங்கள் நிரப்பப்படவில்லை. ஏழைகளுக்கு வேலை கிடைத்து விட்டால், கையில் பணம் வந்து விடும். பா.ஜனதாவின் ஆட்டமும் முடிந்து விடும். அதனால் தான் அரசு பணி இடங்களை மத்திய அரசு நிரப்பாமல் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த மாநாட்டில் கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story