தோட்டத்தில் சட்டவிரோதமாக அமைத்த மின்வேலி மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
தோட்டத்தில் சட்டவிரோதமாக அமைத்த மின்வேலி மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா கென்சாப்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 25). இவர் நேற்று முன்தினம் தனது தோட்டத்துக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி சித்தப்பா என்பவரின் தோட்டத்தின் அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது சித்தப்பா, வனவிலங்குகளிடம் இருந்து பயிரை பாதுகாக்க தனது தோட்டத்தை சுற்றி வேலி அமைத்து மின் இணைப்பு கொடுத்திருந்தார். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக மின்வேலியில் அவரது கை உரசியதாக தெரிகிறது. இதனால் அவர் மீது மின்சாரம் தாக்கியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த லிங்கதஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ரவிக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சித்தப்பா தலைமறைவானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சித்தப்பாவை வலைவீசி தேடி வருகிறார்கள்.