ஐ.எம்.ஏ. நிறுவனத்தில் முதலீடு செய்த 56 ஆயிரம் பேருக்கு இன்னும் பணம் கிடைக்கவில்லை


ஐ.எம்.ஏ. நிறுவனத்தில் முதலீடு செய்த 56 ஆயிரம் பேருக்கு இன்னும் பணம் கிடைக்கவில்லை
x

பெங்களூருவில் உள்ள ஐ.எம்.ஏ. நகைக்கடை நிறுவனத்தில் முதலீடு செய்த 56 ஆயிரம் பேருக்கு இன்னும் பணம் கிடைக்கவில்லை. 4 ஆண்டுகள் கடந்தும் பணம் கிடைக்காததால் மக்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர்.

பெங்களூரு:

பல ஆயிரம் கோடி ரூபாய்

பெங்களூரு சிவாஜிநகரில் மன்சூர்கான் என்பவர் ஐ.எம்.ஏ. என்ற பெயரில் நகைக்கடை நிறுவனம் நடத்தி வந்தார். இவரது நகைக்கடையில் தங்க நகைகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பணம் முதலீடு செய்திருந்தனர். ஆனால் அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்காமல் பல ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்திருந்தது.

இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையில், ஐ.எம்.ஏ. நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு, அவர்களது பணத்தை திரும்ப கொடுக்க அரசு சார்பில் தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் ஐ.எம்.ஏ. நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துகளை ஜப்தி செய்து, அவற்றை ஏலம் விட்டு, அதில் கிடைக்கும் பணத்தை வாடிக்கையாளர்களுக்கு திரும்ப கொடுத்து வருகிறது.

8,500 பேருக்கு பணம்

அதன்படி, கடந்த 4 ஆண்டுகளில் வெறும் 8500 பேருக்கு மட்டுமே அந்த குழுவினர் பணத்தை திரும்ப கொடுத்துள்ளனர். அதாவது ரூ.50 ஆயிரத்திற்கு குறைவாக முதலீடு செய்திருந்த 8,500 பேருக்கு மட்டுமே முழு தொகையும் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஐ.எம்.ஏ. நிறுவனத்தில் ரூ.1 லட்சத்திற்கும் மேல் நகை சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்த 56 ஆயிரம் பேருக்கு இன்னும் பணம் திரும்ப கிடைக்கவில்லை. 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் பணத்தை இழந்தவர்கள் மிகுந்த ஆதங்கம் அடைந்துள்ளனர்.

ஐ.எம்.ஏ. நிறுவனத்தில் நடந்த மோசடி குறித்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, ரூ.150 கோடி மதிப்பிலான சொத்துகளை ஜப்தி செய்திருந்தது. அந்த ரூ.150 கோடியும் தற்போது கோர்ட்டில் உள்ளது.

56 ஆயிரம் மக்கள் ஏமாற்றம்

ஆனால் கோர்ட்டில் இன்னும் விசாரணை தொடங்கவில்லை. அந்த வழக்கின் விசாரணை நடைபெறும் போது தான், கோர்ட்டில் ரூ.150 கோடி சொத்துகளை ஏலம் விடுவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு திரும்ப கொடுப்பது குறித்து எடுத்துரைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே ஐ.எம்.ஏ. நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவர்களுக்கு படிப்பாக பணத்தை திரும்ப கொடுக்கும் பணிகள் நடந்து வருவதாகவும், கூடிய விரைவில் அனைவருக்கும் பணம் கிடைக்கும் என்றும் அரசால் அமைக்கப்பட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Next Story