கர்நாடகத்தில் 5 ஆண்டுகளில் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 380 போலீசார் மீது தாக்குதல்
கர்நாடகத்தில் 5 ஆண்டுகளில் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 380 போலீசார் மீது தாக்குதல் நடந்துள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 380 போலீஸ்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 3 ஆயிரத்து 489 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
போலீஸ்காரர்கள் மீது தாக்குதல்
கலபுரகியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஸ்ரீமந்த் இல்லால். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை கும்பலை பிடிக்க சென்ற ஸ்ரீமந்த் மீது 30 பேர் கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தி இருந்தது. தற்போது அவர் பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் போலீசார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது கடந்த 2017-ம் ஆண்டு முதல் இதுவரை மாநிலத்தில் 380 போலீசார் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். இதில் 107 பேர் சப்-இன்ஸ்பெக்டர்கள், 49 பேர் உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், 128 பேர் போலீஸ்காரர்கள், 96 பேர் போலீஸ் ஏட்டுகள் ஆவார்கள். பெங்களூருவில் 138, உத்தர கன்னடாவில் 62, ஹாவேரியில் 23, மங்களூரு, பெலகாவியில் தலா 20 போலீஸ்காரர்கள் தாக்கப்பட்டு உள்ளனர்.
வன்முறை நேரத்தில்....
போலீஸ்காரர்களை தாக்கிய வழக்குகளில் உத்தர கன்னடாவில் 802 பேர், மங்களூருவில் 501 பேர், பெங்களூருவில் 493 பேர், தாவணகெரேயில் 465 பேர், கலபுரகியில் 255 பேர், மற்ற இடங்களில் 973 பேர் என 3 ஆயிரத்து 489 பேர் கைதாகி உள்ளனர்.
இதுகுறித்து மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் நிருபர்களிடம் கூறியதாவது:-
போலீஸ் வேலை என்பது சவால் மிகுந்தது. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது, குற்றச்சம்பவங்களை தடுப்பது உள்பட பல்வேறு சவாலான பணிகள் போலீசாருக்கு உள்ளது. நாங்கள் சூழ்நிலையை எப்படி கையாளுவது என்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி அளித்து உள்ளோம். வன்முறை சம்பவங்கள் ஏற்படும் நேரத்தில் தான் போலீசார் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். போலீசார் மீது தாக்குதல் நடத்தப்படுவதை தடுக்க வேண்டியது அவசியம் என்றார்.