கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆதரவற்றோர் இல்லங்கள்-கலெக்டர்களுக்கு மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரி உத்தரவு
கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆதரவற்றோர் இல்லங்கள் அமைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு சமூக நலத்துறை மந்திரி கோட்டா சீனிவாசபூஜாரி உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு: கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆதரவற்றோர் இல்லங்கள் அமைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு சமூக நலத்துறை மந்திரி கோட்டா சீனிவாசபூஜாரி உத்தரவிட்டுள்ளார்.
ஆதரவற்றோர் இல்லங்கள்
சமூக நலன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரி நேற்று பெங்களூருவில் இருந்தபடி மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது அவர் மாநிலத்தில் பிச்சை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு உதவ அனைத்து மாவட்டங்களிலும் ஆதரவற்றோர் இல்லங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் கோட்டா சீனிவாசபூஜாரி பேசியதாவது:-
கர்நாடகத்தில் ஆதரவற்றோருக்கு ஆதரவற்றோர் இல்லங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் இதற்கு இடத்தை அடையாளம் காண வேண்டும். பிச்சை எடுக்க அரசு தடை விதித்துள்ளது. இதனால் அவர்களுக்கு ஆதரவற்றோர் இல்லங்கள் அமைக்க வேண்டியது அவசியம். அவர்களின் நலனுக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது.
மயானங்கள்
ஆதரவற்றோருக்காக அரசு ஒதுக்கியுள்ள நிதியை உள்ளாட்சி அமைப்புகள் உடனடியாக ஒதுக்க வேண்டும். மாவட்டங்களில் மயானங்கள் மற்றும் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் குறித்த விவரங்களை அரசுக்கு அனுப்ப வேண்டும். தூய்மை பணியாளர்களின் நலனுக்காகவும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு கோட்டா சீனிவாசபூஜாரி பேசினார்.
இதில் சமூக நலத்துறை செயலாளர் கேப்டன் மணிவண்ணன், கமிஷனர் ராகேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.