பெங்களூரு ஆஸ்பத்திரிகளில் ஐகோர்ட்டு நீதிபதி திடீர் ஆய்வு
பெங்களூரு உள்ள ஆஸ்பத்திரிகளில் ஐகோர்ட்டு நீதிபதிகள் திடீரென்று ஆய்வு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு:
பெங்களூரு சிவாஜிநகரில் பவுரிங் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இதுபோல மல்லேசுவரத்தில் கே.சி.ஜெனரல் அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இந்த 2 ஆஸ்பத்திரிகளிலும் நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை,
படுக்கைகளை சுத்தமாக வைப்பது இல்லை என்று கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி வீரப்பாவுக்கு புகார்கள் சென்றன. இந்த நிலையில் பவுரிங், கே.சி.ஜெனரல் ஆஸ்பத்திரிகளில் நீதிபதி வீரப்பா நேற்று முன்தினம் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை கிடைக்காதது தெரியவந்தது. மேலும் பணி நேரத்தில் டாக்டர்கள் இல்லாமல் இருந்ததும் தெரிந்தது. இதனால் ஆஸ்பத்திரி ஊழியர்களை கடிந்து கொண்ட நீதிபதி வீரப்பா, நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்து விட்டு
சென்றார்.