பெங்களூருவில், 2024-ம் ஆண்டிற்குள் கன்டோண்மென்ட் ரெயில் நிலைய சீரமைப்பு பணிகளை முடிக்க திட்டம்; தென்மேற்கு ரெயில்வே தகவல்
பெங்களூருவில், 2024-ம் ஆண்டிற்குள் கன்டோண்மென்ட் ரெயில் நிலைய சீரமைப்பு பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தென்மேற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
பெங்களூரு;
பெங்களூருவில் கன்டோண்மென்ட் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் கடந்த 1864-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. மிகவும் பழமையான இந்த ரெயில் நிலையத்தை சீரமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் இந்த ரெயில் நிலையத்தின் பணிகள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட இருந்தது.
ஆனால் இதற்காக முறையான டெண்டர் கோரப்படாததால், பணி தொடங்குவதில் மந்தம் ஏற்பட்டது. இந்த நிலையில் கன்டோண்மென்ட் ரெயில் நிலைய பணிகளை 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க தென்மேற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.
உலக தரத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட ரெயில் நிலையமாக மாற்றும் நோக்கில் இந்த திட்ட பணிகள் செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது. தற்போது இந்த ரெயில் நிலையத்தில் 4 நடைமேடைகள் உள்ளன. அவற்றை 6-ஆக அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மும்பை விக்டோரியா ரெயில் நிலையத்தை போல இது புறநகர் ரெயில் முனையமாக மாற்றப்பட உள்ளது.