பெங்களூருவில் திருட்டு வழக்குகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேர் கைது
பெங்களூருவில் திருட்டு வழக்குகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு: பெங்களூரு ஹெண்ணூர் போலீசார் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 3 வாலிபர்களை கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் பரப்பனஅக்ரஹாரா அருகே புவனேஷ்வரி லே-அவுட்டை சேர்ந்த குணசேகர் என்ற குணா (வயது 21), தமிழ்நாட்டை சேர்ந்த அஜீத் (22), முத்துகுமார் (27) என்று தெரிந்தது. இவர்கள் 3 பேரும் புவனேஷ்வரி லே-அவுட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர்.
பின்னர் ஹெண்ணூர், ராமமூர்த்திநகர், கொத்தனூர், எலகங்கா பகுதிகளில் பூட்டி கிடக்கும் வீடுகளின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடுவதை தொழிலாக வைத்திருந்தனர். அஜீத், முத்துகுமார் மீது தமிழ்நாடு கோவை மாவட்டம் பீளமேடு போலீஸ் நிலையத்திலும் திருட்டு வழக்குப்பதிவாகி இருப்பதும் தெரியவந்துள்ளது. பெங்களூருவில் திருடும் தங்க நகைகளை தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு கொண்டு சென்று 3 பேரும் விற்பனை செய்து வந்துள்ளனர். கைதான 3 பேரிடம் இருந்து ஒரு கிலோ 92 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.49 லட்சத்து 17 ஆயிரம் ஆகும். இவர்கள் கைதானது மூலம் 14 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது.