சன்னகிரியில் கள்ளக்காதலை கண்டித்த மனைவி படுகொலை


சன்னகிரியில்  கள்ளக்காதலை கண்டித்த மனைவி படுகொலை
x
தினத்தந்தி 20 May 2023 12:15 AM IST (Updated: 20 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சன்னகிரி தாலுகாவில் கள்ளக்காதலை கண்டித்த மனைவியை தொழிலாளி படுகொலை செய்தார்.

சிக்கமகளூரு-

சன்னகிரி தாலுகாவில் கள்ளக்காதலை கண்டித்த மனைவியை தொழிலாளி படுகொலை செய்தார். தற்போது அவர்களது குழந்தை ஆதரவற்ற நிலையில் உள்ளது.

கள்ளக்காதல்

தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகா கத்லகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்(வயது 34). தொழிலாளியான இவருக்கும், அனிதா(29) என்ற பெண்ணுக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில் அசோக்கிற்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

தனிமையில் உல்லாசம்

இதுபற்றி அசோக்கின் மனைவி அனிதாவுக்கு தெரியவந்தது. இதனால் கடும் கோபமடைந்த அனிதா, தனது கணவர் அசோக்கை கடுமையாக கண்டித்தார். மேலும் கள்ளக்காதலை கைவிட்டு விடும்படி கணவனுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இருப்பினும் அசோக் தனது கள்ளக்காதலை கைவிடவில்லை. அவர் தனது கள்ளக்காதலியை அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தார்.

இதனால் அனிதா, தனது கணவன் அசோக்கிடம் சண்டையிட்டு வந்தார். நேற்று முன்தினம் இப்பிரச்சினை தொடர்பாக கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

தப்பி ஓட்டம்

இதில் ஆத்திரம் அடைந்த அசோக் தனது மனைவி அனிதாவை சரமாரியாக தாக்கினார். வீட்டில் கிடந்த உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களாலும் அனிதா மீது கடுமையாக தாக்குதல் நடத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அனிதா சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அசோக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுபற்றி அறிந்த அனிதாவின் பெற்றோர் விரைந்து வந்தனர். அவர்கள் அனிதாவின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். பின்னர் அவர்கள் இதுபற்றி சன்னகிரி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அசோக்கை வலைவீசி தேடிவருகிறார்கள்.

ஆதரவற்ற நிலையில் குழந்தை

தாய் கொலை செய்யப்பட்ட நிலையில், தந்தையும் தலைமறைவாகி விட்டதால் அசோக்-அனிதா தம்பதியின் மகன் ஆதரவற்ற நிலையில் உள்ளான். அவனை போலீசாரின் அனுமதியுடன் அனிதாவின் பெற்றோர் பராமரித்து வருகிறார்கள். கள்ளக்காதலை கண்டித்த மனைவியை தொழிலாளியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story