சிக்கமகளூரு மேல்சபை தேர்தலில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அளித்த வாக்குகள் செல்லாது
சிக்கமகளூரு மேல்சபை தேர்தலின்போது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அளித்த வாக்குகள் செல்லாது என்று கா்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சிக்கமகளூரு;
மேல்சபை தேர்தல்
கர்நாடகத்தில் கடந்த ஆண்டு(2021) 75 மேல்சபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் சிக்கமகளூரு மேல்சபை தொகுதி தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.சி. காயத்ரியும், பா.ஜனதா கட்சியை சேர்ந்த தற்போதைய எம்.எல்.சி.யான பிரானேசும் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் காயத்ரியை விட 3 வாக்குகள் அதிகமாக பெற்று பிரானேஷ் வெற்றி பெற்றார். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க முடியாது, ஆனால் அதை மீறியும் அவர்கள் வாக்கு அளித்ததால் தான் பிரானேஷ் வெற்றி பெற்றதாக காங்கிரசார் குற்றம்சாட்டினர். இதனால் காயத்ரி வெற்றி பெற்றார் என அறிவிக்ககோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்து இருந்தனர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஐகோர்ட்டில் வழக்கின் விசாரணை நடந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட ஐகோர்ட்டு நீதிபதி கூறியதாவது:- சிக்கமகளூரு மேல்சபை தொகுதி தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தது செல்லாது. இந்த வழக்கில் தீர்ப்பு 15-ந்தேதி அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் அனுமதி
இந்த வழக்கில் ஐகோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து காயத்ரி வெற்றி பெற்றுவிட்டதாக கூறி சிக்கமகளூருவில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்து கொண்டாடினார்கள்.
இதுகுறித்து பா.ஜனதா எம்.எல்.சி. பிரானேஷ் கூறுகையில், இது தற்காலிக சந்தோஷம் தான், தேர்தல் ஆணையமே எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க அனுமதி அளித்துள்ளது. இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்ப்போம் என்றார்.