சிக்கமகளூருவில் சுற்றுலா தளங்களில் குப்பை கழிவுகள் குவிந்தன
சிக்கமகளூருவில் சுற்றுலா தளங்களில் குப்பை கழிவுகள் குவிந்து கிடப்பதாக சமூக ஆர்வலகர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
சிக்கமகளூரு;
கர்நாடகத்தில் தீபாவளியையொட்டி கடந்த 4 நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள சந்திர திரிகோண மலை, பாபாபுடன்கிரி, முல்லையன்கிரி, கெம்மன்குந்தி, அன்னபூர்னேஸ்வரிநகர், சிருங்கேரி சாரதாம்மன் கோவில், கலசா கலசேஸ்வரா கோவில் உள்பட பல்வேறு இடங்களில் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
இதில் பெரும்பாலானவர்கள் வீடுகளில் இருந்து உணவு பொருட்களை கொண்டு வந்து சாப்பிட்டனர். மேலும் கடைகளில் வாங்கிய தண்ணீர் பாட்டில்கள், தின்பண்டங்களை வாங்கி வந்து சாப்பிட்டனர். பின்னர் அவர்கள் அந்த பொருட்களை அதே இடத்தில் வீசிவிட்டு சென்றுவிட்டனர். இதில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் சாப்பாடு தட்டுகள்தான் அதிகம் கிடந்தது. இந்த குப்பைகளால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதுடன், இயற்கையும் பாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து தகவல்அறிந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்கள் சொந்த முயற்சியில் அந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்களுக்கும் அறிவுரை வழங்கி வருகின்றனர்.