சித்ரதுர்காவில் மின்கட்டணம் செலுத்த கிராமமக்கள் மறுப்பு
சித்ரதுர்காவில் மின்கட்டணம் செலுத்த கிராமமக்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் பெஸ்காம் ஊழியர் பரிதவித்தார்.
சிக்கமகளூரு-
சித்ரதுர்காவில் மின்கட்டணம் செலுத்த கிராமமக்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் பெஸ்காம் ஊழியர் பரிதவித்தார்.
காங்கிரஸ் கட்சி வெற்றி
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. பா.ஜனதா 66 இடங்களும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 19 இடங்களும் வெற்றி பெற்றன. இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.3 ஆயிரம்(2 ஆண்டுகளுக்கு மட்டும்), 200 யூனிட் மின்சாரம் வீடுகளுக்கு இலவசம், பாலிடெக்னிக் படித்தவர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும். பஜ்ரங்தள அமைப்புக்கு தடைவிதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பா.ஜனதா, இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது. இந்தநிலையில் காங்கிரஸ் அறிவித்த திட்டங்கள் முதல் மந்திரி சபை கூட்டத்திலேயே அமல்படுத்தப்படும் என காங்கிரஸ் தலைவர்கள் கூறினர். மேலும் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் ஜுன் மாதம் முதல் பொதுமக்கள் வீடுகளுக்கு மின்சாரம் கட்டணம் கட்ட வேண்டாம் என தேர்தல் பிரசாரத்தில் கூறினார்.
பெஸ்காம் ஊழியர்
இந்தநிலையில் சித்ரதுர்கா மாவட்டம் ஜாலிகட்டே கிராமத்துக்கு பெஸ்காம் ஊழியர் வீடுகளில் மின் அளவீடு செய்ய சென்றார். அப்போது அந்த பகுதி மக்கள் நாங்கள் மின்கட்டணம் செலுத்த மாட்டோம். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் மின்கட்டணம் செலுத்த தேவையில்லை என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போகிறது. இதனால் நாங்கள் மின்கட்டணம் கட்ட தேவையில்லை என கூறினர். இதற்கு பெஸ்காம் ஊழியர் பொதுமக்களிடம் கூறுகையில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் அவர்கள் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த 200 யூனிட் மின்சாரம் கட்டணம் இலவசம் இன்னும் அரசு உத்தரவு பிறப்பிக்கவில்லை. அதனால் நீங்கள் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என கூறினர்.
வீடியோ வைரல்
ஆனால் அப்பகுதி மக்கள் பெஸ்காம் ஊழியரிடம் அது எல்லாம் எங்களுக்கு தெரியாது நாங்கள் மின்கட்டணம் செலுத்த மாட்டோம் என கூறினர். இதனால் பெஸ்காம் ஊழியர் அப்பகுதியில் பரிதவித்து நின்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.